SHARE

மத்திய குழுவில் 30 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மாத்திரமல்லாமல் எங்கள் கட்சிக்கு எட்டு மாவட்டங்களிலும் கிளைகள் காணப்படுகின்றன. அந்த எட்டு மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள் எங்கள் மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள். இந்நிலையில் 30 பேர் கொண்ட காத்திரமா னதொரு மத்திய குழு மணிவண்ணன் தொடர்பான விவகாரத்தை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே, விசாரணைகளின் முடிவில் சகல விடயங்களும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என மேற்படி கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க. சுகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(01) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம் அண்மையில் கட்சியின் முக்கிய பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் தொடர்பான விவகாரம் இன்னும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதொரு விடயம். குறித்த விவகாரம் இற்றைவரை முற்றுப் பெறவில்லை. முற்றுப் பெறாததொரு விடயத்துக்கு விசாரணைகள் முடிவுபெறாத கட்டத்தில் நாங்கள் எடுத்த எடுப்பிலே முடிவுகளை அறிவிக்க முடியாது.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை முடிவுகளை எடுத்துவிட்டு விசாரிக்கின்றதொரு கட்சி கிடையாது. சில தரப்புக்கள், சில கட்சிகள் முடிவுகளை எடுத்துவிட்டு விசாரணை செய்கின்ற காரணத்தால் அவர்களால் முதலிலேயே முடிவுகளை அறிவிக்க முடிகிறது. ஆனால், எங்கள் கட்சி அப்படியானதொரு கட்சியல்ல. ஒரு ஜனநாயக கட்சி எனவும் அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email