SHARE

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்துள்ளது.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத் தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்குப் பதிலாக இலங்கையின் நலனுக்காக, மக்கள் வழங்கிய கட்டளைகளின் ஆதரவுடன் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வில், உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீளநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போதே இலங்கை பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் தன்னார்வ கடமைகளுக்கு இணங்க நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களின் பிரச்சினைகளின் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயல்படும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஐ.நா. விசேட அறிக்கையாளரின் சிறப்பு அறிக்கையில் இலங்கை குறித்த பல கவலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் உண்மை நீதி இழப்பீடு மீளநிகழாமை போன்ற விடயங்களில் சாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை, அறிக்கையாளர் தனது அறிக்கையில் உண்மையாகவும் சாதகமாகவும் குறிப்பிடவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகள், உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email