SHARE

வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள் முதலில் வன்னியில் எமது மக்களின் நிலைமைகளை அவதானிக்க வேண்டும். எமது மக்கள் அதிகளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அங்கு மலசலகூடம் இல்லாத கிராமங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால், பெண்கள் அதிக சிரமங்களைச் சந்திக்கின்றனர். இவ்விடயத்தில் பிரதமர், அமைச்சர்களுக்கு ஆணையிட்டு வன்னி மாவட்டத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எமது மக்கள் போருக்குப் பின்னர் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மீள்குடியேற்ற விடயங்களில் சொந்த நிலங்களில் அரசாங்க ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக, மகாவலி வலயம் என்பது மிக மோசமாக எமது மக்களைப் பாதிக்கின்றது. பறவைகள் சரணாலயம் எனக் கூறிக்கொண்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இவற்றை கவனத்திற்கொள்ளவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கும்.

ஒவ்வொரு அபிவிருத்திக் கூட்டத்திலும் வன இலாகாவின் செயற்பாடுகளைக் கண்டித்து கருத்துக்களை முன்வைத்தோம். எனவே, ஒவ்வொரு மாவட்டக் குழுக் கூட்டத்திற்கும் முடிவெடுக்கும் அதிகாரிகள் வந்து கவனஞ்செலுத்த வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு ஐயங்கண் குளம் ஆலயத்திற்கு எதிர்வரும் 26ஆம் திகதி மக்களை வர வேண்டாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இது எமது மக்களின் மத உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடாகும். எனவே, இவற்றில் பொலிஸார் தலையிட வேண்டாம்” என அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email