SHARE

விடியல் பிறக்கும் போது வலிந்து போர்த்திய இருள் அகலும்

வன்னிமகள். எஸ்.கே.சஞ்சிகா

1963-11-29 இல் பிறந்த இராசையா வாத்தியாரின் மகன் பார்த்தீபன் தற்போது இருந்திருந்தால், 57 வயதை அடைந்திருப்பான். யாழ் பல்கலைக்கழகத்தில்  மருத்துவபீடத்தில் கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த காரணத்தால், ஒரு தலைசிறந்த மருத்துவநிபுduhக திகழ்ந்திருப்பான். சொத்துப்பத்து சுகபோகம் நிறைந்த நல்வாழ்வு அமையப்பெற்றிருக்கும். இனிமையான திருமண உறவில் இரண்டோ மூன்றோ பிள்ளைகளைப்பெற்றிருப்பான். துல்லியமாக கணக்கிட்டுப்பார்த்தால்,பேரப்பிள்ளைகளையும் காணும் வாய்ப்பைப் பெற்றிருப்பான். ஆனால் பார்த்தீபன் இன விடுதலை உள்ள ஒரு புரட்சியாளனாக, விடுதலைத்தாகம் கொண்ட பொதுவுடமைவாதியாகப்பிறந்ததால் அவனால் சாதாரண மனிதர்களின் சராசரி வாழ்வை வாழ முடியவில்லை.

வட்டுக்கோட்டைத்தீர்மானம் அன்றைய காலத்தில் இளைஞர்களிடையே புதுவித உத்வேகத்தை உண்டாக்கியது. அதனால் தனது பதினெட்டாவது வயதிலிருந்தே(1983) மாணவனாக இருந்து கொண்டே தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்புடன் இணைந்து செயற்படலானார். யாழ்.மருத்துவபீடத்திற்குத்தெரிவான போதும் தன் படிப்பை கைவிட்டு,திலீபன் என்ற புதிய பெயரோடு முழுநேர விடுதலைப்புலி உறுப்பினரும் ஆகினார். அத்தோடு யாழ் மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.

அந்தக்காலப்பகுதியில் தான் இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜேவர்த்தனாவும் இந்தியப்பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இந்தியப்படைகளை அமைதிப்படை என்ற பெயரிலேயே அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் வடக்குகிழக்கிற்கு இறக்குமதி செய்தனர். அமைதிப்படைக்கு ஒத்துழைக்கும் விதமாக விடுதலைப்புலிகளாக செயற்பட்ட இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களை கையளிக்குமாறு கோரப்பட்டது. இந்திய வல்லரசு,  காந்தியவழிவந்த வல்லரசு அமைதியைத் தரும் எனக்கருதி ஆயுதங்களை இளைஞர்கள் இந்தியப்படைகளிடம் ஒப்படைத்தனர்.

நிலமை சரியாகும். நிரந்தர அமைதி கிடைக்குக்கும் என எதிர்பார்த்திருக்க, அந்த சமாதான அமைதிக்காலத்தை தமக்குச் சாதகமாகப்பயன்படுத்தி புதிதாக காவலரண்களை இலங்கையரசு நிறுவியது. புணர்வாழ்வு என்ற பெயரைப்பயன்படுத்தி சிங்களக்குடியேற்றங்களை உருவாக்கியது. இந்திய இலங்கைப்படைகளோடு ஒட்டிக்கொண்ட ஏனைய ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலிகளை ஆயுத முனைகளால் தாக்கTம் தொடங்கினர். இந்த அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஒரு உபாயவழியாகவே திலீபன் அவர்கள் அகிம்சை வழியான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி மாலைப்பொழுதில், தமிழரின் சங்கமரபின் கபிலனார் வடக்கிருந்தது போல, நெஞ்சில் மூட்டிய தியாகத்தீia சுமந்து, முப்புரம் எரித்தசிவன் போல புன்னகையும் புரிந்து, நல்லூரான் ஆலயவாசலில் அவன்பாதம் பட்ட வேளை, நரைத்த வெள்ளைத்திரை பூத்த தலையோடு,  குடுகுடுத்த நடையோடு அம்மாளாச்சியே வந்து ஆசீர்வதித்து அனுப்பியதுபோல், அன்னையொருத்தி அவன் அருகே வந்து சந்தணத்தில் திலகமிட்டு ஆசி வழங்கியது , தற்செயல் நிகழ்ச்சிதான். கபிலர் போல தீலீபன் வடக்கிருந்ததும் தற்செயலே. ஆனால் முன்னே முடிந்ததொரு செயலாக அது அமைந்தது. திலீபன் நல்லூரான்  ஆலய வீதியில் உண்ணாவிரதத்துக்கென அமைக்கப்பட்ட மேடையில் ஏறி தனது உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தான்.

 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தான். 

01.மீளக்குடியமர்தல் என்ற பெயரில்வடக்கிலும் கிழக்கிலும் 

புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

02.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

03.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

04.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

05.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

ஆனால் இந்தக்கோரிக்கைககளை அமைதிகாக்க வந்த இந்தியப்படைகள் அலட்சியப்படுத்தின. மனோபலத்தை மிஞ்சிநின்ற திலீபனின் தியாகத்தை அவர்கள் சராசரி மனித வாழ்வியல் நாட்களை வைத்து  காலங்கடத்திக்கொண்டிருந்தனர். ஏற்கனவே வல்லைவெளியில் சிங்கள ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நேரடி மோதலில் தனது வயிற்றுப்பகுதியில் காயமடைந்து இரண்டங்குல குடல் சத்திரசிகிச்சை மூலம் திலீபன் அவர்களுக்கு அகற்றப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப்பதிலாக ஆட்டுக்குடல் பொருத்தியதாக வதந்தியை கிளப்பியுள்ள வரலாற்று வதந்தி நகைப்புக்கிடமானது. மருத்துவத்துறைக்கே சவாலான வதந்தி அது.

இரண்டங்குலக்குடல் அகற்றப்பட்ட நிலையிலும் தன் மனோ பலத்தோடு தன் சுய அபிலாசையோடு தலைவரிடம் அடம்பிடித்து அனுமதி பெற்றுக்கொண்டவர் திலீபன் அவர்கள். பாதுகாப்புப் படைகளாக…. அமைதிப்படைகளாக…உலகிற்கே அகிம்சையைப்போதித்த நாட்டவர்களாக வந்த பச்சைச்சீருடைகளிடம் பார்த்தீபன் பச்சைத்தண்ணீர் கூட அருந்தாமல் நீதி கேட்டு நோன்பிருந்தான். 

நீதி கிடைக்கவில்லை

1987 புரட்டாதி 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு ஆயுதமற்ற அகிம்சைப்போராளியின் கடைசி மூச்சு காற்றோடு காற்றாகி கலந்து எரிமலைப்பிளம்புகளை உற்பத்தி செய்தது. ஈழத்தமிழர் வரலாற்றில்  ஒரு தியாகப்பயணம் பலநூறு பொறிகளை உருவாக்கி அமைதி கொண்டது. யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் சாவடைந்த செய்தி கேட்டு நல்லூரான் வீதி கண்ணீரால் தத்தளித்தது.  ஈழமே ஆற்றாமைத்துயரால் வெடித்தழுதது. தாயற்ற திலீபனுக்கு ஈழத்தில் தான் எத்தனை எத்தனை தாய்மார் ஒப்பாரியிட்டு சொந்தப்பிள்ளை இறந்த துக்கம்போல் கதறித்துடித்தனர்.

காலத்துக்குக் காலம் அமைதி என்றும் சமாதானம் என்றும் பல வடிவங்களோடு பல ஆட்சியாளர்கள் அநீதிக்கோலோடு வந்து தம் ஆக்கிரமிப்புக்களை செய்தவண்ணமே உள்ளனர். திலீபனின் கனவுகளில் ஒன்றாக யாழ். கோட்டையில் புலிக்கொடி பறக்க வேண்டும் என்ற ஆசை 1990 இல் நிறைவேறியது. 

மக்கள் புரட்சி வெடித்தாலே சுதந்திர தமிழீழம் மலரும் என மக்களிடமே ஈழக்கனவை விதைத்துச்சென்றவன் திலீபன். தியாகி. தியாகச்செம்மல். எங்கள் அறவழியின் அண்ணல். ஆயிரமாயிரம் தோழர்களோடு வானத்து நட்சத்திரங்களாக ஈழம் மலர்வதைப்பார்ப்பேன். என எதிர்வு கூறியவன். 

கனவு நனவாகும். காலம் கனியும். ஈழத்தமிழர் வாழ்வில் புதிய யுகம் பிறக்கும்.  

மாண்டவீரர் கனவு பலிக்கும். மகிழ்ச்சிக்கடலில் தமிழ்மண் குளிக்கும். பார்த்தீபன் கனவும் பலிக்கும். நம்பிக்கையே வாழ்வு. விடியல் பிறக்கும் போது வலிந்து போர்த்திய இருளும் அகலும். 

Print Friendly, PDF & Email