SHARE

பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில் அவர் அதிஸ்டவசமாக தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர்மேல் அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவமாகும். 

இலங்கையில் ஊடகவிலாளராக செயற்பட்ட இவர் மீது ஈபிடிபியினர் மரணதண்டனை விதித்து, யாழ்ப்பாணத்தில் இருத்த அவரது அலுவலத்தில் துப்பாக்கி பிரயோகமும் செய்திருந்தனர். அதிலிருந்து மயிரிழையில் உயர் தப்பித்த அவர் தற்போது லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிறார். இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். 

தமிழ்மக்களுக்கான பல்வேறு மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர் குறிப்பாக இலங்கையில் புதிய அரசின்கீழ் தொடரும் ஆள் கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சியில் கடத்தல் தீவு (Abducton Island) என்ற ஆவணப்படம் மூலம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார். இதைவிட, லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்து, வழிநடத்தி வெற்றிபெறச்செய்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இராஜதந்திர பாதுக்காப்பு உள்ள அதியுயர் மட்ட இராணுவ அதிகாரி ஒருவரை முதல் முதலாக குற்றவாளியாக நிரூபித்த வழக்கு என்பதால் காரணத்தால், இது சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி, தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்  முதல் சட்ட வெற்றியாகவும் கருதப்படுகிறது. இதனால் பிரியங்க பெர்னாண்டோ பதவியிழந்து லண்டனைவிட்டு தப்பியோட நேரிட்டது மட்டுமன்றி, இலங்கைக்கு இராஜதந்திர அரங்கில் பாரிய தலைகுனிவையும் ஏற்படுத்தியது. 

இதுமட்டுமன்றி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஐநாவிற்கு எடுத்து செல்வதில் பெரும்பங்கு வகிக்கும் இவர் அண்மையில் இலங்கையில் ஆட்கொணர்வுமனுக்களை தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார். இவற்றைவிட முன்னாள் போராளிகளுக்கும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் தெடர்ந்து உதவிவருகிறார். 

இவரின் இந்த மனித உரிமை செயற்பாடுகளுக்காக, இவர் மீது மீண்டும் மீண்டும் இலக்கு வைத்து தாக்குதல்களும் பழிவாங்கல் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இவர் தொடர்பான அனாமதேய அவதுறு செய்திகள் திட்டமிட்டு பரப்பட்டுவந்த நிலையில், தற்போது தாக்குதல்களும் ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கடந்த யூன் மாதம் நள்ளிரவில் இவரது பிரத்தியேக அலுவலகத்தினுள் புகுந்த நபர் இவரை தாக்கவும் ஆவணங்களை திருடவும் முயற்சி செய்துள்ளார்.

தற்போது, இவரது கார் மீது இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற விதம், நேரம் என்பன இது வெறும் களவு முயற்சி அல்ல என்பதையும், நீண்டநாளாக இவரை பின்தொடர்த்து, கண்காணித்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிசெய்கிறது.  இவற்றின் பின்னணியில் இலங்கை தூதரகதும் புலனாய்வு அதிகாரிகளும் இருப்பதும் தெளிவாக தெரிகிறது. பிரித்தானிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரிகேடியர் பிரியங்க வழக்கின் போது அவரின் சட்டத்தரணி, இலங்கை தூதரகத்தின் அறிவிறுத்தல்படி, வழமைக்கு மாறாக கீத் குலசேகரம் அவர்களின் பெரிய படம் ஒன்றை நீதிமன்றில் பெரிய திரையில் காண்பித்து, இந்த வழக்கின் பின்னால் இவர் இருப்பதாகவும் வாதிட்டது குறிப்படத்தக்கது. அவரது பணிகளை தடுக்கும் அச்சுறுத்தல் முயற்சியாகவே இவை இடம்பெறுவது மிகவும் கவலைக்குரியது.

Print Friendly, PDF & Email