SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடக அமைப்புகள் இணைந்து இன்று (15) கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று நண்பகல் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள், பேரணியாகச் சென்று முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட வனவளத் திணைக்களம் என்பவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியதுடன், ஊடகவியலாளர்களைத் தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி மகஜரொன்றை  கையளித்தனர்.

அதேவேளை, காடழிப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் வனவளத் திணைக்களத்தின் முன்பாக மரக்கன்றொன்று ஊடகவியலாளர்களால் நடப்பட்டது.

காவல்துறையா, கள்ளமரம் வெட்டும் துறையா?, ஊடக அமைச்சர் தூக்கமா? பெயரளவில் தான் ஊடக சுதந்திரமா? போன்ற கோஷங்கள் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டன. 

இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் பெருமளவில் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதேவேளை, போராட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸ் புலனாய்வாளர்களும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email