SHARE

ஹொரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளியான நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ், பாதாளக்குழு மற்றும் பொலிஸாருக்கு இடையில் இன்று அதிகாலை நடைபெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மாகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும், பாதாள உலககுழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாகந்துரே மதுஷ் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், 22 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 02 கைத்துப்பாக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

மாகந்துரே மதுஷ், இலங்கையில் நடந்த கொலைகள், பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளியாக கருதப்படுகின்றார்.

நாட்டை விட்டோடி டுபாயில் தலைமறைவாகி இருந்த அவர், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அந்நாட்டில் நடத்திய விருந்துபசாரம் ஒன்றில் போதைப் பொருட்களுடன் துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவருடன் 31க்கும் மேற்பட்டோர் இதன் போது கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 மே மாதம் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

Print Friendly, PDF & Email