SHARE

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண   தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மேல் மாகாணத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இன்று நள்ளிரவுக்குப் பின்னர், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மேல் மாகாணத்தில் உட்பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த வாரத்தின் இறுதி நாட்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Print Friendly, PDF & Email