SHARE

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் புனித மருத்தினார் குருபீடத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் ஒளிப்படங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களை உள்ளடக்கி அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகினார்.

சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து அவர் சமர்ப்பணம் செய்தார்.
பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேக நபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email