SHARE

யாழ். மாவட்டத்தில்  ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த  2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கவலை வெளியிட்டார்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வரை 22 பேர் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். அதனைவிட 1010 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேருக்கு  அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்.

தற்போது மாவட்ட செயலகத்திற்கு  12.4மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. அந்த நிதியின் மூலம்   நிவாரண  பொருட்கள் வழங்கி வருகின்றோம் . இதனைவிட நாளாந்தம்   தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களில் விபரங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி நிதியினை பெற்று நிவாரணப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

இதனைவிட யாழ் மாவட்டத்தில் தற்பொழுது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல இதர செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்படுத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், பொது மண்டபங்கள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல் களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்ட தொற்று – குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வெளிவந்தவர்களால் பரவி இருக்கின்றது ஆகவே வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்களுடைய உண்மையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம். அநேகமான தகவல்கள் தற்பொழுது பரிசீலனை செய்யும்போது பெரும்பாலானவர்கள்  பிழையான தகவல்களை வழங்கியுள்ளார்கள். வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களுடைய சரியான தகவல்களை வழங்க வேண்டும். ” – என்றும் அவர் கூறினார்.

Print Friendly, PDF & Email