SHARE

புரெவி அச்சத்தால் திருகோணமலையில் 75 ஆயிரம் பேர், நிவாரண மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ,75,000 பேரையும் 237 மத்திய நிலையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ´புரெவி´ புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

´புரவி´ புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதி ஊடாக புயல் ஊடறுத்து செல்லவுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் கொக்குளாய் பகுதியில் உள்ள கரையோர மக்களை இன்று (02) இரவு பாதுகாப்பான இடைத் தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இந்த புயல் தாக்கம் பாதிக்கும் என்று எதிர்பாக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று அவர்களை இடைத்தங்கல் முகாமிற்கு மாறும்படியான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மக்களும் இந்த விடையத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் அநாவசியமாக கரையோரங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்கி கொள்ளவேண்டும். 1978 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் நிலப்பரப்பினை புயலொன்று ஊடறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் கொக்குளாய் பகுதியும் உள்ளடங்கப்படுகின்றது. மீனவ சமூகத்தினை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் அவர்களை இன்று இரவு தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

படகுகள் கரையோரத்தில் இருந்து 100 மீற்றருக்கு அப்பால் நகர்த்திவைத்து முன்னாயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுவதாக பீபள் நியூஸின் செய்தியாளர் தெரிவித்தார்

மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது.

மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இன்று புதன் கிழமை காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்சியான மழை நீடித்து வருகின்றன.

தொடர்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதுடன் கடலை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் நுழைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

Print Friendly, PDF & Email