SHARE

செல்வம் அடைக்கலநாதன்

” வடக்கு, கிழக்கிலே மரமொன்றில் ஐந்து கொக்குகள் இருந்தால்கூட அது இன்று பறவைகள் சரணாலயமாகிவிடுகின்றது. செங்கல் இருந்தால் அது தொல்லியல் இடமாகிவிடுகின்றது. இவ்வாறு தமிழர்களின் பூர்வீகத்தை அழிப்பதற்கு சதி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீகத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. குறிப்பாக மரமொன்றில் ஐந்து கொக்குகள் இருந்தால்கூட அப்பகுதி பறவைகள் சரணாலயமாகிவிடுகின்றது. விவசாயம் செய்யமுடியாது, குளங்களை பயன்படுத்தமுடியாது, வீடுகள் கட்டமுடியாது என அடக்குமுறைகள் தொடர்கின்றன.

வன பாதுகாப்பு என்ற போர்வையில் நடந்தவை தற்போது பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் நடக்கின்றன. தமிழர்களின் காணிகள் திட்டமிட்ட அடிப்படையில் பறிக்கப்படுகின்றன. வவுனியாவில் வனங்கள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் அரங்கேறுகின்றன. விகாரைகள் கட்டப்படுகின்றன.

தொல்பொருள் திணைக்களமானது  செங்கல்களை கொண்டுவைத்துவிட்டு, அது தங்களுடைய பாரம்பரியம் எனக்கூறி எங்களுடைய பூர்வீகத்தையும், பாரம்பரியத்தையும் அழிக்க முயற்சிக்கின்றது. கடல்வளமும் சூறையாடப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும். எமது மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தொடர்ந்தால் அதனை உடைத்தெறிவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Print Friendly, PDF & Email