SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்தமையினால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

காற்றுடன் கூடிய பலத்த மழை ஓய்ந்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இருந்து, இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதிகளும் மாந்தை கிழக்கு துணுக்காய் பகுதிகளும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக திருமுறுகண்டி, இந்துபுரம் மற்றும் மாங்குளம், துணுக்காய் வீதியின் ஒரு பகுதியிலுள்ள வீடுகளும், பனிக்கன்குளம் கிராமத்தில் ஒரு பகுதியிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த நான்கு கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை சூழ வெள்ளம் காணப்படுகின்ற நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்

இந்நிலையில் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றமையினால், அங்கு தங்க முடியாத நிலையில் இருந்த சுமார் பத்து குடும்பங்கள், இந்துபுரம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த கிராமத்தில் இவ்வாறு குடும்பங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இன்று இரவு 9மணி அளவில் குறித்த பகுதிக்கு சென்ற இந்துபுரம் கிராம இளைஞர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் செல்லையா பிறேமகாந் உள்ளிட்டவர்கள் சென்று, மக்களை குறித்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து, பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Print Friendly, PDF & Email