SHARE

விடுதலைப்புலகளுக்கு எதிராக பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த தடையை அரசு நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (1) பிரித்தானியாவின் Peterborough தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Paul Bristow எம்.பி.யுடன் கொவிட்-19 இடர்கால சூழ்நிலை விதிமுறைகளுக்குட்பட்டு மெய்நிகர் ஊடகம் மூலம் கலந்துரையாடலை மேற்கொண்ட தினேஸ் நவரட்ணம், விக்னேஷ் தங்கேஸ்வரன் தலைமையிலான குழுவினர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்.பி. , குறித்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் பாராளுமன்ற அமர்வில் மேற்படி விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் நீதியின்பால் நின்று அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற முயற்சிப்பேன் எனவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர்களான சசிகரன் செல்வசுந்தரம், கபிலன் அன்புரெத்தினம், சுஜிதா கனகசபாபதி, விஜய் விவேகானந்தன், குகதாசன் சுலக்சன், அன்ரனி அலேசியஸ் றூபேட் அன்ரனி, அரவிந்தராஜ் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டார்கள். அதன் பின்னர் 2009 இல் இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 2018 இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) விடுதலைப்புலிகளை தடைப்பட்டியிலிருந்து நீக்க வேண்டும் என கோரி பிரித்தானியாவின் உள்நாட்டு அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தனர்.

அந்த கோரிக்கையை பரிசீலனை செய்த உள்நாட்டு திணைக்களம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாங்கள் விடுதலைப்புலிகளை தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்போவதில்லை என்ற தமது தீர்வை அறிவித்தார்கள். இதனையடுத்து அந்த முடிவுக்கு எதிராக நாடுகடந்த அரசாங்கம், Proscribed Organistion Appeal Commission எனும் நீதிமன்றிடம் மேன்முறையீடு செய்தார்கள். குறித்த மனு மீதான விசாரணை கடந்த ஜீலை மாதம் நீதிமன்றினால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை நீதிமன்றம் இரு வகையில் அமுல்படுத்தும். அதில் ஒன்று உள்நாட்டு அலுவலகத்தை மீள் பரிசீலனை செய்யும் படி உத்தரவு வழங்கலாம். அல்லது அவர்கள் தடையை எடுக்க வேண்டும் அதற்கான ஒரு ஆணையை பாராளுமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிடலாம். இவ்வாறு இரு வகையான உத்தரவுகளை வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது.

இந்நிலையிலேயே தடையை நேரடியாக நீக்குமாறு உள்நாட்டு திணைக்களத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு அல்லது பாராளுமன்றில் குறித்த விவகாரம் தாக்கல் செய்யப்படுமாயின்; அதில் தமிழ் மக்கள் சார்ப்பாக தடையை நீக்க வலியுறுத்தி குரல் கொடுக்குமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பிக்களை மேற்கொண்டுவரும் தமிழ் செயற்பாட்டாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email