SHARE

”எந்தவொரு காரணத்துக்காகவும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை  நடத்துவதற்கும் இடமளிக்கமாட்டோம். எனவே, மாகாணசபை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் வலியுறுத்தினார்.

மாகாணசபை முறைமையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே தேரர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” மாகாணசபை முறைமை என்பது ஜே.ஆர். ஜயவர்தனவால் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொற்று நோயாகும். இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. பிரதேச அபிவிருததிகள் முடங்கின. நிர்வாகப் பணிகளும் குழம்பின.

மறுபுறத்தில் கட்டடம், ஆளனி பலம் உட்பட மாகாணசபைகளை நிர்வகிப்பதற்கும் பெருமளவு நிதி செலவிடப்படுகின்றது. இவ்வாறு வீண்விரயமாகும் நிதியை அபிவிருத்திக்கு பயன்படுத்தலாம். எனவேதான் மாகாணசபை முறைமை அவசியமில்லை என வலியுறுத்துகின்றோம்.

எக்காரணம் கொண்டும் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை நடத்துவதற்கு நாம் உடன்படவும் மாட்டோம். மாகாணசபைகள் தொடர்பான சட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையவேண்டும். ” – என்றார்.

Print Friendly, PDF & Email