SHARE
சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம்

2021 ஜனவரியில் இருந்து பிரித்தானியாவில் புதிய குடிவரவுத் திட்டம் அமுல்ப்படுத்தப்படும். இப்புதிய திட்டம் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய விசாவுக்குத் தகுதிபெற வேண்டுமாயின் ஒருவர் 70 புள்ளிகளைப் பெறவேண்டும். 2021 ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் இப்புதிய குடிவரவுத் திட்டம் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியக் குடிவரவு முறைமையில் கொண்டுவரப்படவுள்ள இப்புதிய மாற்றமானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் இடம்பெறும் ஓர் முக்கிய நிகழ்வு என உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல் தெரிவித்துள்ளார்.

இத்திட்டமானது ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவினுள் சுதந்திரமாக உட்பிரவேசிப்பதை முடிவுக்குக் கொண்டுவருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தினையும் சமூகங்களையும் மேலோங்கச் செய்வதற்காக உலகளாவிய ரீதியிலுள்ள பிரகாசமானவர்களையும் திறன்கொண்டவர்களையும் நாம் ஈர்ப்போம் எனவும் நாட்டிலுள்ள அனைத்து ஆற்றல் கொண்டவர்களையும் வெளிக்கொண்டுவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிர ஒன்றிய பிரஜைகளும் ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சாராத பிரஜைகளும் புதிய நடைமுறையின் கீழ் சமத்துவமாக நடத்தப்படுவர் என அரசாங்கம் கூறுகின்றது. இப்புதிய நடைமுறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை உள்வாங்குவதை இலக்காகக்கொண்டது. ஆனால் இந்த முன்மொழிவு சமூகத் துறைக்கு நிச்சயமாகப் பேரழிவாக இருக்கும் என்றும் விவசாயத்தில் தாக்கங்கள் ஏற்படும் என்றும் பாரிய கரிசனைகள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இப்புதிய நடைமுறையின் கீழ் விசாவுக்குத் தகுதிபெற குடிவரவாளர் ஒருவர் 70 புள்ளிகளைப் பெறவேண்டும். இனிவரும் காலங்களில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு மூன்று நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்படுமானால் 50 புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்கும்.

அவையாவன:

  1. உள்துறை அலுவலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில் வழங்குனரிடமிருந்து ஓர் வேலை வாய்ப்புக்கான அழைப்பினைப் பெற்றிருத்தல். இது 20 புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்கும்.
  2. இந்த வேலைவாய்ப்பு தேவையான திறன் மட்டத்தில் உள்ளதாக இருக்கவேண்டும். இது 20 புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்கும்.
  3. ஆங்கிலம் பேசும் திறன் குறிப்பிடக்கூடிய மட்டத்தில் இருக்கவேண்டும். இது 10 புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்கும்.

£25,600 இற்கு மேல் ஒருவர் சம்பாதிக்கவேண்டும்

ஜனவரி 2021 இலிருந்து பிரித்தானியாவுக்கு தொழில் நிமித்தம் வருபவர்களின் குறைந்தபட்ச கட்டயாய ஊதியம் £30,000 இலிருந்து £25,600 ஆக குறைக்கப்படுகிறது. £25,600 இற்கு மேல் சம்பாதிப்பவர்கள் மேலும் 20 புள்ளிகளைப் பெற்றுக்கொள்வர். £25,600 இற்கு குறைவாக ஆனால் £20,480 இற்கு குறையாமல் உழைப்பவர்களும் குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கும் வர்த்தக ரீதியிலான புள்ளிகளைப் பெற்று பிரித்தானியாவுக்கான விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டாய சம்பள எல்லையினைக் குறைப்பது போல் தகுதி நிலையினையும் பட்டதாரி மட்டத்திலிருந்து உயர்தர மட்டத்திற்கு அரசாங்கம் குறைக்கின்றது. பட்டதாரியாகத் திறன் கொண்டவராக இருக்கவேண்டிய அவசியம் இனி இல்லை. அதாவது பட்டதாரி மட்ட வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல உயர்தர மட்ட வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்களும் வரமுடியும்.

புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வேறு வழிகள்

மூன்று கட்டாய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தும் £25,600 இனை சம்பாதிக்கமுடியாமல் £23,040 இற்கும் £25,599 இற்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் 10 புள்ளிகளைப் பெற்றுக்கொள்வர். இது மட்டுப்படுத்தப்பட்ட வரையறைக்குள் இருக்கும் என்பதால் இதுசார்ந்த விடயங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

குடிவரவு அலோசனைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவகையில் ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகின்ற துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமாயின் அவர்கள் மேலும் 20 புள்ளிகளைப் பெற்றுக்கொள்வர்.

சுகாதாரப் பணியாளர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் தொழிநுட்ப பணியாளர்கள் போன்ற தொழிற் பட்டடியல்களிலேயே பற்றாக்குறை நிலவுவதாக குடிவரவு ஆலோசனைக் குழு கருதுகின்றது. NHS இல் பணியாற்றுவதற்காக வரும் வெளிநாட்டு வைத்தியர்களும் தாதியர்களும் துரிதகதியில் விசாவினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் திட்டத்தினயும் இந்தப் புதிய நடைமுறையின் கீழ் அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.

NHS இல் பணியாற்ற விண்ணப்பிப்பவர்கள் இந்தப் புதிய நடைமுறையின் கீழ் விசேட கவனிப்பினைப் பெற்றுக்கொள்வர். இவர்களின் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சம்பந்தப் பட்ட துறையில் Phd பட்டம் பெற்றவர்கள் மேலும் 10 புள்ளிகளைப் பெற்றுக்கொள்வர். இந்த Phd பட்டமானது விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் ஆகியவற்றில் இருந்து அவர்களின் வேலைக்குப் பொருத்தமாக இருந்தால் இது 20 புள்ளிகளுக்கு உயர்த்தப்படும். .

வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லையாயின் என்ன செய்யமுடியும்?

தேவையான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் திறமையான தொழிலாளர்கள் பொருத்தமானதும் தகுதியுடையதுமான ஓர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டால் வேலைவாய்ப்பு இன்றி பிரித்தானியாவுக்கு வரமுடியும்.

ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை இல்லாதவர்களைப் போலவே ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை கொண்டவர்களும் “உலகளாவிய திறன் கொண்டோர்” வழிமுறையினூடாக அடுத்த வருட ஜனவரி மாதத்திலிருந்து வரமுடியும். இந்த வழிமுறை விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல, மற்றும் கணிதவியல் போன்ற பின்னணியுடையவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு விசா மறுக்கப்படும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திரமான நடமாட்ட விதிகள் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து புதிய குடிவரவு முறைமையின் கீழ் திறன் குறைந்த தொழிலாளர்கள் பிரித்தானியாவுக்கு வரக்கூடிய நடைமுறை எதனையும்; அமுல்படுத்தாது என அரசாங்கம் கூறுகின்றது.

இதற்குப் பதிலாக பிரித்தானிய வர்த்தகங்கள் அதற்கேற்ப சீர்செய்யப்படவேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. பதிலாக, பிரித்தானிய வர்த்தகங்கள் ஊழியர்களைத் தக்கவைப்பதிலும் திறன்களை விருத்திசெய்வதிலும் தொழிநுட்பம் மற்றும் கணினிமயப்படுத்தல் போன்றவற்றிலும் முதலிடுதல் வேண்டும்.

விவசாயிகள்:

விவசாயத்துறையில் பருவகால தொழிலாளர்களுக்கான விசா அனுமதித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காகக்கப்பட்டு 10000 அனுமதிகள் வழங்கப்படும்.

இது பழ உற்பத்தி விவசாயிகள் போன்ற முதலாளிகளின் அச்சங்களை நிவர்த்திசெய்வதை இலக்காகக் கொண்டது. குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் மீது கட்டுப்பாடு விதித்தால் ஒவ்வொரு கோடை காலத்திலும் தமது விளைச்சல்களை எடுக்க போதிய ஊழியர்கள் இல்லாமல் இருக்கும் என்பது விவசாயிகளின் கரிசனையாகும்.

மாணவர்கள்:

மாணவர்களும் இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தினுள் உள்வாங்கப்படுவர். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது கல்லூரியிலிருந்து அனுமதி கிடைக்குமாயின் அவர்கள் தேவையான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டவர்களாக இருக்கவேண்டும். அங்கிலம் பேசக்கூடியவர்களாகவும் தமது கற்கை நெறிக் காலத்தில் தமது தேவைகளைத் தாமே பூர்த்திசெய்யக்கூடியவர்களாகவும் இருந்தால் புள்ளிக்ளைப் பெற்றுக்கொள்வர்.

சுய தொழிலாளிகள்:

சுய தொழிலாளர்களுக்கெனப் பிரத்தியேக வழியினை அரசாங்கம் அமைக்காது. ஆனால் தற்போதுள்ள Route for innovators என்ற வழிமுறையினூடாக அவர்கள் பிரித்தானியாவுக்கு வரமுடியும். இநதத் திட்டம் அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சாராத பிரஜைகளுக்கும் ஏதுவானதாக விரிவுபடுத்தப்படும்.

விசேட தொழிலாளர்கள், மத குருமார்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் தற்போதுள்ள குடிவரவு வழிமுறைகளினூடாக அனுமதிக்கப்படுகின்றனர். இது ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சாராத பிரஜைகளுக்கும் ஏதுவானதாக விரிவுபடுத்தப்படும்.

கலைஞர்கள், பொழுதுபோக்காளர்கள், இசைக் கலைஞர்கள் தமது நிகழ்வுகளில் மற்றும் போட்டிகளில் பங்கேற்க தொடர்ந்தும் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு ஆறு மாதாகால விசா வழங்கப்படும்.

அயர்லாந்து மக்கள்:

அயர்லாந்தினைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய குடிவரவு நடைமுறைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் தற்போது உள்ளதைப் போலவே உள்வர அனுமதிக்கப்படுவர். இவற்றைவிட, 01 ஐனவரி 2021 இலிருந்து, பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து அனேக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதானால் கண்டிப்பாக sponsor licence பெற்றிருக்க வேண்டும் (அயர்லாந்து மக்களை தவிர).

மேலதிக தகவல்களுக்கு:

https://www.gov.uk/guidance/new-immigration-system-what-you-need-to-know

Print Friendly, PDF & Email