SHARE

இன அழிப்பிற்குள்ளான தமிழ் மக்களிற்கு பர்மா மற்றும் சிரியா நாடுகளில் அரங்கேறிய இன அழிப்பு தொடர்பிலான சர்வதேசத்தின் கவனம் நம்பிக்கையினை தந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற கட்சிகள் ஒற்றுமையாக பொது இணக்கப்பாட்டிற்கு வருவதன் மூலம் ஜ.நா. வில் காத்திரமான நகர்வுகளை முன்னெடுக்க முடியுமென தெரிவித்துள்ளார் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்த அவர் இந்நிலையில் ஒரு சில தமிழ் தலைவர்களது போக்கானது கேலிக்குரியதாகவும்  தங்களை ஒரு தலைமைத்துவத்தினுள் அடையாளப்படுத்துவதாகவும் இல்லாதுள்ளது.

தமிழ் கட்சிகளிடையே இருப்பது கொள்கை முரண்பாடாக அல்லது கையாள்கை பிரச்சினையாகவே இருக்கும். அது அல்லாது அவர்கள் ஒவ்வொருவரது வீட்டுப்பிரச்சினைகள் அல்ல.

தமிழ் மக்கள் நலன்கருதி எங்களிற்குள் பேச தயாராக இல்லாதவர்கள் தமிழ் மக்களிற்கான தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள். அவர்கள் தங்களை தலைவர்கள் என சொல்லிக்கொள்ளவும் அருகதையற்றவர்களென அவர் மேலும் தெரிவித்தார். 

நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்ற ஜ,நா.வில் இலங்கை தமிழ் மக்களது இன அழிப்பிற்கான நீதி கோரும் நகர்வுகள் தொடர்பான சந்திப்பின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச தயாரில்லையென தெரிவித்திருந்தார்.

தேவையாயின் அவர் சார்பு பிரதிநிதிகளுடன் மட்டும் பேச தயார் எனவும் தெரிவித்திருந்தார். 

சுமந்திரனுடன் இணைந்து ஒரே மேசையில் பேச தயாராகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சி.வி.விக்கினேஸ்வரனுடன் பேச மறுத்தமை தொடர்பிலேயே சுரேஸ் பிறேமச்சந்திரன் கேலிக்கூத்தென தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email