SHARE

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடும் இலங்கை அரசை கண்டிக்கக்கோரி ஐ.நா.வுக்கு மகஜர் !

பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வெண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுப்பது மற்றும் கண்டிப்பதற்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) மகஜயர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து இன்று தனது உடக அறிக்கையை வெளியிட்ட ICPPG, ஐ.நா.வுக்கு குறித்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டதே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (08.01.2021) இரவு இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக வாயில் மூடப்பட்ட நிலையில நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையானது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பல அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இது வெறுமனே கல் மற்றும் மண்ணால் கட்டியெழுப்பப்பட்ட கட்டடம் அல்ல. உணர்ச்சிகளின் உறைவிடம். ஆந்தவகையில் இறந்தவர்களை நினைவு கூறும் அடிப்படை உரிமையைக்கூட இலங்கை அரசு பறித்து வருகின்றது. தவிர, தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன் தமிழர்களின் கலாச்சார மத அடையாளங்களையும் அழித்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான அரசே தற்போது மீண்டும் ஆட்சியிலுள்ளது. இந்த அரசு இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்துவருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை கவனமாகவும் சீராகவும் அகற்ற திட்டமிட்டுள்ளது. இதனாலேயே முள்ளி வாய்க்கால் நினைவு சின்னத்தை அகற்ற ஒத்துழைக்காத முன்னாள் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்து அதற்கு ஒத்துழைத்த தற்போதைய துணைவேந்தரை நியமித்து அதனை அரங்கேற்றியுமுள்ளது.

இத்தகைய செயல்களை இலங்கை அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருவதுடன் யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆனபோதிலும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் அவர்களில் தொடர்ச்சியான நிராகரிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

கடந்த காலங்களில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களிற்கு எதிராக இழைத்த அதியுச்ச இனவழிப்பே முள்ளிவாய்க்கால் படுகொலை. தமிழ் மக்களைக் முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்தது மட்டுமன்றி அவர்களை நினைவுகூர்ந்து எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதனைக் கூட தடைசெய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

அத்துடன் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் மீண்டும் அதே இடத்தில் நாட்டுவதற்கு துணைவேந்தர் அளித்த வாக்குறுதியை வரவேற்பதோடு அதனை குறிப்பிட்ட காலத்தினுள் உரிய குழுக்களை அமைத்து விரைவில் பூர்த்திசெய்யவேண்டியும் வலியுறுத்துகிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும் தமிழ் சமூகம் சார்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கபட்ட மகஜரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கவும் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் தமிழ் மற்றும் சர்வதேச சமூகங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

PRESS-RELEASE-Condemn-the-Demolition-of-Memorial-at-Jaffna-University-13-Jan-2021

Letter-to-UN-on-the-Demolitition-of-Mullivaikkal-Memorial-at-Jaffna-Uni-Encl-12.01.2021

Print Friendly, PDF & Email