SHARE

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது இந்தப் பேரணியை முன்னெடுப்பதற்காக சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சர்வமதப் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பமானபோது விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து போராட்டத்தினைத் தடுக்க முற்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை அகற்ற முனைந்தபோது முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்த முற்பட்டதை தொடர்ந்து முறுகல் நிலையேற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாரால், ஏற்றம் பகுதியில் தடைகளை ஏற்படுத்திப் போராட்டத்திற்குச் சென்றவர்கள் வழி மறிக்கப்பட்டு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன.

இன்று போராட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தடைகள் நீதிமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அதனையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அக்கரைப்பற்று பகுதிக்குப் பேரணி சென்றதையடுத்து தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த போராட்டம் அக்கரைப்பற்று நகர் ஊடாக அட்டாளைசேனை வரையில் நடைபெற்றது.

Print Friendly, PDF & Email