SHARE

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேரணி வாகரையை அண்மித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு, தாழங்குடாவில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமான இரண்டாம் நாள் பேரணியானது மட்டக்களப்பு நகரை அடைந்ததுடன் அங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பேரணியுடன் இணைந்துகொண்டனர்.

கருப்புக் கொடிகளுடன் கலந்துகொண்ட உறவினர்கள், கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொடுக்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் திருகோணமலை நோக்கிச் செல்லும் பேரணிக்கு தமிழர் பகுதிகளிலும் முஸ்லிம் பகுதிகளிலும் மகத்தான வரவேற்பளிக்கப்படுவதுடன் பெருமளவானோர் பேரணியில் இணைந்து வருகின்றனர்.

வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதிக்கு பேரணி சென்றபோது அங்கு பெருமளவான முஸ்லிம்கள் பங்குகொண்டு வரவேற்பளித்ததுடன் போராட்டத்திலும் கலந்துகொண்டனர். ஓட்டமாவடியில் முன்னாள் அமைச்சர் அமீர்அலி தலைமையிலானோர் அணிதிரண்டு ஆதரவு வழங்கினர்.

அத்துடன், பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு முஸ்லிம்கள் குடிநீர் மற்றும் குளிர்பானம் வழங்கி ஆதரவு வழங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேரணியானது திருகோணமலை வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ‘இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டும்’, ‘தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்து’ மற்றும் ‘படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடு’ போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பொலிஸார், அதிரடிப்படையினர் தொடர்ந்து பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் பேரணி தடைகளை மீறி வடக்கை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email