SHARE

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் , இலங்கை பற்றிய விசரணைக்கான ஐ.நா. நிபுணர் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தவரும் , தென் ஆபிரிக்காவைத் தளமாக கொண்ட ஒரு முன்னணி இடைக்கால நீதிக்கான நிபுணருமான ஜஸ்மின் சூக்கா, வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

நேர்காணல்: பொ.சோபிகா

கேள்வி: இலங்கை அரசாங்கம் இப்போது நினைவேந்தும் உரிமை மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் புதைத்தல் உட்பட சிறுபான்மையினரின் மிகவும் அடிப்படையான மனித உரிமைகளைக் கூட மறுக்கின்றது. இந்த நிலையில் ஐ.நா. சபையோ வெறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வேறு எதுவும் இதுவரை செய்யவில்லை. இவ்வாறு ஆக்கபுர்வமாக எதுவும் செய்யமுடியாதுள்ள ஐ.நா, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு வழங்குமென எவ்விதம் நம்புவது? அனைவரது கவனமும் தற்போது ஜெனிவா மீது திரும்பியுள்ள வேளையில் இந்த முறையாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

பதில்: நீதியையும் பொறுப்புக் கூறலையும் அடைவதற்கு மோசமான மனித உரிமைகள் மீறல்கள் புரியப்பட்டுள்ளன என்பதற்கான சாட்சியங்கள் அவசியம். மனித உரிமைகளின் நிலைமை பற்றிய ஐ.நா.வின் அறிக்கைகள் குறிப்பாக ழுர்ஊர்சு இன் அறிக்கைகள் சர்வதேச சமூகம் மற்றும் குறிப்பாக உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் முக்கியமானவை. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் மற்றும் அவரது அலுவலகத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட அறிக்கையானது தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கை அரசாங்கம் தனது கூட்டு ஈடுபாட்டினை நடைமுறைப்படுத்த தவறியமைக்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

அத்துடன் இராணுவ மயமாக்கல் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்தின் பின்னடைவு பற்றிய கரிசனைகளையும் எழச் செய்கின்றது. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த அறிக்கை இல்லாவிட்டால் ஜெனிவா அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்தை பேசுபொருளாக்க ஒரு சிறிய சந்தர்ப்பமே இருக்கும்.

ஆனால் இப்போது பச்லெட் அம்மையார், ஜெனிவாவின் மனித உரிமைகள் சபையிலுள்ள உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கூறலை தொடர்வதற்கு பல்வேறு வகையான பொறிமுறைகளை வழங்கியுள்ளார். இறுதிப் போரில் புரியப்பட்ட போர்க் குற்றங்களுக்கு போதிய பொறுப்புக்கூறல் இல்லாமை குறித்து முற்றிலுமான விரக்தியையும் வலியினையும் உங்களுடைய வினாவில் நான் உணரமுடிகிறது. மக்கள் அனுபவித்துள்ள கொடுமைகளுக்கு முற்றிலுமான தண்டனையிலிருந்து பாதுகாப்பு இருந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இலங்கையில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டதனால் இலங்கை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், இறுதியுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவேந்த அமைக்கப்பட்ட நினைத்தூபி இடிக்கப்பட்ட போது நாங்கள் அதைக் கண்டோம். மேலும் தங்கள் உறவுகளின் நிலையை அறிய பாதுகாப்பு படையினரை அழைத்து விசாரணை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமையால், காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் மீது காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நம்பிக்கை இழந்திருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம். அதேவேளையில், நீதிக்கான தமிழர்களின் தாகம் இன்னும் தீரவில்லை என உறுதியாக கூறுகிறேன். தமிழர்கள் தற்போதைய சூழ்நிலையுடன் போராடும் அதேவேளையில் உலகம் முழுவதும் எம்மைப் போன்ற சிறு குழுக்களும் தனிநபர்களும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி சேகரித்து, எதிர்காலத்துக்காக அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றோம்.

இது ஒரு காப்புறுதித் திட்டம் போன்றது என்பதால் தற்போது இடம்பெறும் மீறல்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவதுடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கான ஆதாரங்களைச் சேகரித்து பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும். பல நாடுகளில், மிகப்பெரும் அக்கிரமங்கள் இடம்பெற்ற பின்னர் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது., ஆனால் நாங்கள் சிறிது சிறிதாக தொடர்ந்தும் முயற்சி செய்வது அவசியம் ஐவுதுீ ஆனாது இலத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவில் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறது. அத்துடன் நாங்கள் ஐ.நா அமைதிகாப்பு பணியில் இலங்கை தொடர்ந்தம் பங்கெடுப்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளோம். இந்த அறிக்கைகள் யாவும் உபயோகமற்ற காகிதத் துண்டுகள் போல இருக்கலாம். ஆனால் அவைதான் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலைக் கட்டியெழுப்பவதற்கான அடித்தளமாக உண்மையில் இருக்கப் போகின்றன. எதிர்காலத்தில் எந்தவொரு நீதிமன்ற வழக்கு அல்லது தடை விண்ணப்பமோ போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டுவர, குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் அவசியமாகும். பச்லெட்டின் அறிக்கையானது ஐ.நா அமைதிகாப்பு பணியில் ஈடுபடும் இலங்கைப் படையினரை அதற்குரிய பொறிமுறைகளின் படி ஆய்வுக்குட்படுத்தல் மற்றும் அமைதிகாப்பு பணியில் பயன்படுத்தல் பற்றிய பிரச்சினையும் எழுப்புகின்றது. அவருடைய கருத்துக்கள் பொறுப்புக்கூறலை அடைவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றன.

சுயாதீனத் தன்மையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இழந்துவிட்டது

கேள்வி: ஜெனிவா அமர்வு நெருங்கும் சமயத்தில் இலங்கையிருந்து படையினரை ஐ.நா. படைக்கு பயன்படுத்துவதை இடை நிறுத்த வேண்டும் என தற்போது கோரிக்கை விடுப்பதற்கான காரணம் என்ன ?

பதில்: படைகளை வௌிநாட்டில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் உரிய பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய சட்ட ரீதியான கடமை ஐ .நா. அமைதிகாக்கும் அமைப்புக்கும் உண்டு. இலங்கைப் படையினர் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட முன்னர் சரியான முறையில் அதற்குரிய பொறிமுறைகளின் படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை நியுயோர்க்கில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அண்மைய ஆண்டுகளாக,குறித்த அதிகாரிகள் அதனைத் தாம் செய்யாமல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினையே நம்பினார்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னர் ஒரு சுயாதீனமான ஒரு அமைப்பாக கருதப்பட்டது. ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் அது சுயாதீனத் தன்மையை இழந்துவிட்டது. இதனை நான் மட்டும் சொல்லவில்லை – தனது இறுதி அறிக்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டும் ” இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. அதனுடைய தலைவராக முன்னாள் அரசாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டமையால் அதனுடைய சுயாதீனத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தௌிவாகத் தெரிவித்துள்ளார்.

படையினரை ஆய்வுக்குட்படுத்துவதற்கு ஒரு புதிய பொறிமுறை வேண்டும் என்பதையே இது காட்டுகின்றது. அவ்வாறான பொறிமுறை கொண்டுவரப்படும்வரை இலங்கையில் இருந்து படையினரை அமைதிப் பணிகளில் பயன்படுத்தப்படுவது அனைத்தும் இடைநிறுத்தப்பட வேண்டும்.

இராணுவத்தளபதியே இலங்கைக்கு பிரச்சினை

கேள்வி: இது ஒரு கொள்கைரீதியிலான அல்லது தொழிநுணுக்கம் சார்ந்த விடயம் மாத்திரமில்லையா?

பதில் : இல்லை. ஐக்கிய நாடுகளிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான , மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தை மதித்து நடப்பதை ஊக்குவிப்பது அவசியம் என்ற தனது சொந்தக் கொள்கைக்கு உட்பட்டு நடக்குமாறு (ஜூலை 2011 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் உரிய அக்கறை கொள்கை( இது ஐ. நா. வைக்கேட்டுக் கொள்கின்றது. சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் இலங்கையினை அதன் வாக்குறுதிகளை மதித்து நடக்குமாறு நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால் அவை ஐக்கிய நாடுகளினை அதன் கொள்கைளை மதித்து நடக்குமாறு கேட்டுக் கொள்ளமுடியும்.

எனவேதான் இங்கு கொஞ்சமாவது பொறுப்புக்கூறலை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பத்தையேனும் அடையமுடியும். அமைதிகாக்கும் படையினராக வௌிநாடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் , ஐ. நா. சார்பாகச் செயற்படுமாறு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகின்றார்கள்அமைதிப்படையினர் நிலை கொண்டுள்ள நாட்டிலுள்ள பொதுமக்கள் ஆபத்தில் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை ஐ.நா. கவனமாக உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

தனது அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஐ.நா. வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் , அந்த நாடுகளிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் கடமை அதற்கு இன்னும் உண்டு. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அபாயம் இருப்பின் ஒரு இராணுவ வீரரை பெரும்பாலும் ஐ.நா. அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியும் அல்லது அந்த நாட்டின் படையினரைப் பயன்படுத்தப்படுவதை இடைநிறுத்த முடியும். வௌிநாட்டுக்கு படைகளை அனுப்பும் இலங்கை போன்ற நாடுகள், அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்த முன்னர் தமது படையினரை ஆய்வு செய்வதற்கான பிரதான பொறுப்பினை எடுத்துக் கொள்ளும் அந்த நாடுகளையே ஐ.நா. நம்பியுள்ளது.

இன்னுமொரு நாட்டில் தமது படையினர் மனித உரிமைகளை மீறமாட்டார்கள் என்பதை , அமைதி காக்கும் பணியில் தாம் வீரர்கள் ஈடுபடுத்தும் நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு தமது படையினர் பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்ட எந்தப் பதிவுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை ஆதாரபூர்வமான வௌிப்படுத்த வேண்டிய சட்ட ரீதியான கடப்பாடு அந்த நாடுகளுக்கு உண்டு.

அதனால் தமது படையினர் குற்றமிழைக்காமல் ஒவ்வொரு நாடும் அக்கறையோடு இருக்கும்,. இதன் மூலம் போர்க்குற்றம் புரிந்தோரை தமது படைத்தரப்பில் வைத்திருந்து, மக்களுக்கு தீங்கிழைக்கும் அபாயத்திலிருந்து அந்த நாடுகள் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் தமது இராணுவத் தளபதியே அந்த வகைக்குள் ( போர்க்குற்ற மீறலுக்குள்) அடங்குவதே இலங்கைக்கு இப்போதுள்ள பிரச்சினையாகும். அது இப்பொழுது மிச்சல் பச்லெட்டினாலும் அமெரிக்க அரசினாலும் மீளவும் கூறப்பட்டுள்ளது.

சொன்னதைச் செய்யாத ஐ.நா.

கேள்வி: இராணுவத்தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கையை அமைதி காக்கும் நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தப் போவதாக ஐ. நா. சொல்லவில்லையா?

பதில் : ஆம், தாங்கள் அதைச் செய்வோம் என அவர்கள் சொன்னார்கள். “கடுமையான ஆபத்து நிறைந்த இடங்களைத் தவிர ஏனைய நாடுகளில் இலங்கைப் படையினரை அமைதி காக்கும் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக “ஐ.நா கூறியிருந்தது. இலங்கைப் படைகள் தென்சுடான், மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய மோதல் பகுதிகளுக்கு அனுபவம் வாய்ந்த படையினரைப் பெற்றுக் கொள்வது ஐ.நா.வுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனாலேயே அந்தப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இலங்கைப் படைகளை அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்துவதில்லை என ஐ.நா முடிவெடுத்தது.

அதனடிப்படையில் லெபனானிலுள்ள இலங்கைப் படைகளை மிகவும் இலகுவாக அங்கிருந்து அகற்றமுடியும் என நம்பப்பட்டது. இலங்கை வௌிநாடுகளுக்கு அனுப்பும் இராணுவத்தினரின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 25 வீதமானோர் அங்கேதான் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அதன் பின்னர் இன்னமும் அப்படி இலங்கைப் படைகள் அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. இது ஏன் என ஐ.நா விளக்கமளிப்பது அவசியமாகும்.

கேள்வி: அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினர் வௌிநாடுகளுக்குச் சென்றால் அது தமிழர் பகுதிகளில் இராணுவப்பிரசன்னத்தில் தாக்கத்தை உண்டுபண்ணாதா?

பதில்: வௌிநாடுகளுக்கு அனுப்பபடும் 650 இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைப் பற்றியே நாங்கள் பேசுகின்றோம். அவ்வாறு படையினர் செல்வது வடக்கு கிழக்கின் இராணுவமயமாக்கலை ஒரு போதும் குறைக்காது. ஆனால் இலங்கைக்கு அமைதிகாப்பு பணி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அது நாட்டுக்கு வருமானம் தரும் ஒன்றாக இருப்பதுடன் ,முக்கியமாக 2009 க்குப் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கை இராணுவத்துக்கு நற்பெயரை ஏற்படுத்தவும் உதவும். அத்துடன், சர்வதேச ரீதியாக ஒரு தனித்தகமை வாய்ந்த படையாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

இலங்கை இராணுவத்தினர் அனைவரும் மோசமானவர்கள் அல்லர் என்ற தோற்றப்பாட்டையு உருவாக்க உதவும். இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் அல்லது தற்போதும் இடம்பெற்றுவரும் மனித உரிமைமீறல்களில் தொடர்புபட்ட அதிகாரிகளை அதற்குரிய பொறிமுறைகளின் படி ஆய்வுசெய்யும் ஒரு முறை நாட்டில் இருந்தால், தண்டனையில் இருந்து விடுதலைபெறும் கலாசாரம் மற்றும் நடத்தை மாறவேண்டும் என்ற ஒரு செய்தியை அது இராணுவத்திலுள்ள இளநிலை அதிகாரிகளுக்கு உணர்த்தும்,. அதை கணக்கிடுவது கடினமானது .ஆனால் நீண்ட காலப் போக்கில் அது முக்கியமானது.

கெய்ட்டியில் பாலியல் குற்றங்களில் இலங்கைப் படை

கேள்வி: இலங்கை இராணுவத்தினர் வௌிநாட்டில் மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா? அதற்கும் தண்டனையில் இருந்து விதிவிலக்கு உண்டா? வௌிநாட்டவர்களுக்கே பொறுப்புக்கூறல் கிடைக்காதுவிட்டால் எவ்வாறு நாங்கள் அதனை எதிர்பார்க்கமுடியும்?

பதில்: ஆம் தண்டனையில் இருந்து பாதுகாப்பு என்பது ஒரு நீண்ட சுழற்சியாக இருந்திருக்கிறது. 2004 இலிருந்து 2007 வரை இலங்கை இராணுவத்தினர் கெய்ட்டியில் அமைதிகாப்பு படையினராக பணியாற்றினார்கள். அப்போது உணவும், இருப்பிடமும் இல்லாமல் தவித்த கெய்ட்டி நாட்டு சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை திட்டமிட்டவகையில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தினார்கள். இதுபற்றி ஒரு கூட்டு இராணுவ மற்றும் ஐ.நா குழுவினால் விசாரிக்கப்பட்டது.

2004 பிற்பகுதியில் இருந்து 2007 ஒக்ரோபர் நடுப்பகுதி வரையான காலப் பகுதியில் குறைந்தது 134 இலங்கைப்படையினர் இவ்வாறான துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதையும், ஆகக் குறைந்தது கெய்ட்டி நாட்டுச் சிறுவர்கள் 9 பேர் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் சாட்சியங்கள் மூலம் இந்த விசாரணைக்குழு கண்டறிந்தது. இதன் விளைவாக 114 இராணுவத்தினர் தமது இலங்கைக்கு 2007 இல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

தண்டனைக்கு பதில் பதவியுயர்வு

பாலியல் சுரண்டல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொறுப்பதிகாரிகள் எடுக்கத்தவறியதுடன், அவர்கள் (பொறுப்பதிகாரிகள் )பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த விசாரணைக்குழு தெரிவித்திருந்தது. அந்த அதிகாரிகளை தாம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி வழங்கியது .ஆனால் கெய்ட்டியில் சிறுவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக இலங்கைப் படையதிகாரிகள் எவரும்சிறைத்தண்டனை அனுபவித்ததாகத் தெரியவில்லை.

படையணிக்கு பொறுப்பான அதிகாரிகள் அந்தக் குற்றங்களைநிறுத்துவதற்கு தவறியமைக்காக பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட படைவீரர்களில் சிலர் 2009 இறுதிப்போர் நடைபெற்ற போது, களமுனையிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள். கெய்ட்டி பாலியல் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய சில அதிகாரிகள் பதவியுயர்வு வழங்கப்பட்டு, இளநிலை அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வழங்கினார்கள். இந்த விடயம் தொடர்பாக 2016 இல் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. ஆணைக்குழுவினால் இலங்கை அரசாங்கத்திடம் வினவப்பட்டது.

ஆனால் அதற்கு இன்னமும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. கெய்ட்டியில் இடம்பெற்ற சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் என்பன மிகவும் பாரதூரமானவை.அத்துடன் அவை தொடர்ந்தும் இலங்கை இராணுவத்துக்கு ஒரு கரும்புள்ளியாகவே இருக்கும். எனவே அவர்கள் ஒவ்வொரு தடவையும் ஜெனிவாவுக்குச் செல்லும் போதும் ,அமைதிகாக்கும் படையினராக இருப்பதற்கு விண்ணப்பிக்கும் போதும் இந்தவிடயம் இலங்கைக்கு எதிரான மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

பொறுப்புக்கூறாதோரை ஐ.நா. மதிக்காது

கேள்வி : இராணுவத்தினரை ஆய்வு செய்யும் பொறிமுறை (வடிகட்டல்)எவ்வாறு தொழிற்படுகின்றது?

பதில்: ஐ.நா சார்பில் வௌிநாடுகளில் பணிபுரிய படைவீரர் ஒருவர் நியமிக்கப்பட முன்னர் அவரின் முழுமையான பின்னணி ஆராயப்பட்டு நடுநிலையான ஒரு அமைப்பினால் அவரின் நன்னடத்தை உறுதிசெய்யப்படவேண்டும். இதற்கான பொறிமுறையே வடிகட்டல் என அழைக்கப்படுகிறது. இது ஒரு இராணுவ வீரர் குறிப்பிட்ட போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளார் என்பது பற்றி நிரூபிப்பதல்ல. இது வெறுமனே அவர்கள் போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்தினை ஆராய்வது பற்றியதாகும். 2018 இல் மாலியில் இருந்து, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட படையணிக்கான பொறுப்பதிகாரி , 2009 இல் இப்போதைய இராணுவத் தளவதியான சவேந்திர சில்வாவின் கீழுள்ள 58 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 11 ஆவது இலகு காலாற்படைப் பிரிவின் இரண்டாவது கட்டளையதிகாரியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த 58 ஆவது படைப்பிரிவு தான் பாதுகாப்பு வலயங்கள் என்றழைக்கப்பட்ட பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஐ.நா.வின் (ழுஐளுடு) அறிக்கை சொல்கிறது.

58 ஆவது படையணி இருந்த இடங்கள் எங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் வௌியிடப்பட்ட இலங்கைப் பாதுகாப்பமைச்சின் அறிக்கைகளில் இருந்து 11 ஆவது இலகு காலாற்படை இருந்த இடங்களும் எங்களுக்கு தெரியும் . அத்துடன் அந்த அணிகள் இருந்த இடங்களில் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். 11 ஆவது இலகு காலாற்படையின் இரண்டாவது கட்டளை அதிகாரி புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் முன்னரங்க சண்டைகளில் தொடர்புபட்டிருந்தார். மனித உரிமைமீறல்களில் இந்தக் கட்டளையதிகாரி தொடர்புபட்டிருக்கிறார் ஐ.நா. நம்புகிறது. வடிகட்டல் பொறிமுறைக்கு ஒரு நீதிமன்ற வழக்குக்கு தேவையான அதேயளவு சாட்சியங்கள் அவசியமில்லை.

அது ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்தார் என்பதை நிரூபிப்பது என்பதல்ல. மாறாக அவர்கள் பாரதூரமான மீறல்களில் தொடர்புபட்டு இருப்பதற்கான சாத்தியப்பாடு பற்றி ஆராயும். அமைதிகாப்பு என்பது ஒரு கௌரவமான பணியாகும் அத்துடன் அந்த நாட்டுக்கும் சம்பந்தப்பட்ட தனிநபருக்கும் நிதி ரீதியாக நன்மை பயக்கும் ஒன்றாகவும் உள்ளது. ஐ.நா.வின் அமைதிகாப்பு படைவீரராகப் பணியாற்றுவது கௌரவத்துக்குரியது. அத்துடன் ஒரு இராணுவ வீரர் ஒரு ஐ.நா.வின் அமைதிகாப்பு படைவீரராக இருப்பதென்பது , தானாகக் கிடைக்கும் உரிமையில்லை. எமக்கு சந்தேகம் இருப்பவர்களை அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்காதவர்களை நாங்கள் வழமையாக மதிப்பதில்லை.

கேள்வி: பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை தடுப்பதில் இராணுவத்தினரை ஆய்வுசெய்யும் பொறிமுறை எவ்வாறு உதவுகிறது?

பதில்: அமைதிகாக்கும் படையினர் போர் நடைபெறும் நாடுகளில் பாதிக்கப்படக்கூடியவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஆபத்தானது மிகவும் கவலைக்குரியது. எனவேதான் அமைதிகாக்கும் படையினரை ஆய்வுக்குட்படுத்த ஐ.நா. தொடங்கியது. பரவலான அல்லது திட்டமிட்ட பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் காணப்பட்டால் அந்த அணி தனது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் என 2016 இன் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் ஒன்று தெரிவிக்கின்றது.

பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் பற்றி குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு அந்த நாடு அதனை விசாரிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்காவிட்டால் அந்த நாட்டினுடைய அனைத்து இராணுவ அணிகளையும் ஐ.நா பொதுச் செயலாளர் விலக்குவது அவசியம் என இந்தத் தீர்மானம் கூறுகின்றது. கெய்ட்டி துஷ்பிரயோகத்தின் பின்னர் இலங்கையில் நம்பத்தகுந்த விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது பற்றி கேள்விகள் உள்ளன. இது வரைச் செய்து காட்டாத நம்பத்தகுந்த ஒரு நீதிச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதைக் காட்டும் பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

Print Friendly, PDF & Email