SHARE

சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களை உடனே திருப்பியனுப்பக் கூடாதென இலங்கைக்கான சுவிற்சர்லாந்துத் தூதுவரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூதுவர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், “தமிழர்கள் விடயத்தில் ஜெனிவாவில் நிலவும் நிலைப்பாடுகள் குறித்தும், முக்கியமாக 47 நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் மிக முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், 30/1 34/1 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக புதிதாக வரப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு எவ்வாறான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இவற்றைவிட, தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நிலப் பறிப்புக்கள், வனவளத் திணைக்களத்தின் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அரசாங்கத்தினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டுமல்லாது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும் இதன்போது உரையாடப்பட்டது.

அத்துடன், இதுவரை தமது சொந்த இடங்களுக்குச் செல்லாத மக்களது விடயங்கள் குறித்தும் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்ற நிலமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பியனுப்பக்கூடாது என்பதற்கான எழுத்து மூலக் கடிதத்தினை நாங்கள் சுவிஸ் தூதுவரிடம் கையளித்திருந்தோம்.

அதனை அவர் ஏற்றுக்கொண்டதுன், எமது மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக தாங்கள் கையாளவில்லை என்றும் தற்போதும் அவ்வாறான எண்ணம் நமக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email