SHARE

– அன்டோனியோ குட்ரெஸ்

உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதல்நாள் அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மனித நல்வாழ்வுக்கு பல்லுயிர் அடிப்படை என்பது போல, சமூகங்களின் பன்முகத்தன்மையும் மனிதகுலத்திற்கு அடிப்படை என்பதை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் பாரம்பரிய ரீதியான தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏற்றவகையிலான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இருப்பினும், சிறுபான்மை சமூகங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை அழிக்க முற்படும் செயற்பாடுகளையும் தாம் அவதானிப்பதாக அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகத்தின் கலாச்சாரம், மொழி அல்லது நம்பிக்கை தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் பாதுகாப்பு என்ற போர்வையில் அவர்களை சந்தேகத்துடன் நோக்கும்போதும் அனைவரும் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் பின்னடைவுக்கு வித்திடுவதாக சுட்டிக்காட்டிய அன்டோனியோ குட்ரெஸ், மனித உரிமைகள், மத, கலாச்சார மற்றும் தனித்துவமான மனித அடையாளத்தை முழுமையாக மதிக்கும் கொள்கைகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email