SHARE

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி. ஜனகா நீக்கிலாஸின் ‘நடுகை’ என்ற மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “இன்றைய காலகட்டம் என்பது இலங்கைக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டு அஞ்சவில்லை எனக்கூறிய அரசாங்கம் சர்வதேச அழுத்தத்திற்கு அச்சமடைந்துள்ளதை நாம் இப்போது உணரக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கத் தயாரென்கிறார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தற்போது இந்தியாவிடம் மன்றாடுவதுடன் நடுநிலை வகிப்பது முறையல்ல என்று கூறுகிறார்.

முஸ்லிம்களின் ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்துவந்த அரசாங்கம் தற்போது அனுமதித்திருக்கிறது. இவையெல்லாம் எப்படி, எதனால் நடக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இந்த அரசாங்கம் இவ்வாறு தனது சுருதியை மாற்றத் தொடங்கியிருப்பதற்கான பிரதான காரணம் இலங்கை அரசாங்கம்,  அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தவர்கள் தமிழர்கள். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது. சட்டங்கள் மூலம் தமிழர்களின் பேச்சுச் சுதந்திரத்தைக்கூட கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இந்நிலையில், இவ்வாறான இலக்கியங்கள் வெளிவருவது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாக கவிதைகள் உள்ளடங்கிய இந்தச் சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சஞ்சிகையின் கவிதைகளில் ஜெனீவா விடயங்கள் தொடர்பாகவும் இருக்கிறது.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு கவிஞர்களின் பங்கும் மிக அளப்பரியது. ஈழத்தின் கவிச்சக்கரவர்த்தி புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பல கவிஞர்களும் தங்களின் கவி வரிகள் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்தை வெகுஜனப் போராட்டமாக மாற்றி வலுச்சேர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரித்தானிய காலணித்துவத்தின் கீழ் இந்தியா இருந்தபோது மகாகவி பாரதியார் கவிதைகள் ஊடாக விடுதலை வேட்கையை உணர்த்தியவர். பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி மற்றும் கும்மிப்பாடல் போன்றவை அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email