SHARE

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி. அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 5 ஆவது நாளை (03.03.2021) எட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகங்களை புரிந்த தியாக தீபங்களான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அம்பிகை செல்வகுமார் இன்றய நாளினை தொடர்ந்துள்ளார்.

உடல் நிலை மிகவும் மோசமடைந்து தளர்ந்துள்ள நிலையிலும் தனது கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதில் தனது நான்கு அம்சக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மின்னஞ்சலினை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்றைய நான்காம் நாள் மெய்நிகர் (Zoom) நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் நேற்றைய 4 ஆம் நாள் மெய்நிகர் நிகழ்வில் தென்கைலை அதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் இரணைமடு பங்குத்தந்தை மடுதீன் பத்திநாதர் மற்றும் யாழ். முஸ்லிம் இளைஞர் கழக தலைவர் என்.எம்.அப்துல்லாஹ் ஆகியோரின் மும்மத ஆசி உரைகள் இடம்பெற்றதுடன் ஈழத்தின் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்திலிருந்து அனுப்பி வைத்த அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திற்கான தனது ஆதரவு மன உணர்வு ஒளிப்பதிவும் ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் மருத்துவ நிபுணர் பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷின் சிறப்புரையும் திருமதி காந்தா மற்றும் திருமதி ரேணுகா ஆகியோரின் கவிகளும் இடம்பெற்றிருந்தன.

விசேடமாக அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரித்தானியாவின் புறநகர் பகுதியான கொவுன்றி மற்றும் ரக்பி ஆகிய இடங்களிலிருந்து பெருமளவிலானோர் வாகனப்பேரணியாக உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் 5 ஆம் நாளாகிய இன்று அம்பிகையின் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேலும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று சர்வதேசத்திற்கு அழுத்தங்களை வழங்க மெய்நிகர் செயலியின் ஊடான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. பிரித்தானிய நேரம் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பல இணைந்து கொள்ளவுள்ளனர்.

அந்தவகையில் தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்), அருட்தந்தை ம.சக்திவேல் (அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர்), மௌலவி ரிஷ்வி ஆகியோரின் மும்மத ஆசீர்வாதங்களும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை பேராசிரியர் பாதிரியார் குழந்தைசாமி கனடா ஈழமுரசு பத்திரிகையின் பொறுப்பாளர்; திரு கண்ணன் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.

மேற்படி மெய்நிகர் (Zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

நேற்றைய 4 ஆம் நாள் நிகழ்வுகளின் பதிவுகள் சில..

Print Friendly, PDF & Email