SHARE

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பானது ஜெனிவாவுக்காக அரங்கேற்றப்படும் கண்துடிடைப்பு நாடகமாகும் – என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.

காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் சந்திக்கவுள்ளார் எனவும், காணாமற்போனோர் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வரும் வகையிலும், குடும்பத்தினருக்கு தீர்வை வழங்குவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் வெளிவிவகா அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார் என ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியிடமிருந்து சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு விடுக்கப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செல்வார்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஜெனிவாத்தொடரில் அழுத்தங்கள் குவிவதாலும், வெளிநாடுகளை சமாளிப்பதற்காகவுமே இப்படியான அறிவிப்பை விடுத்து கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி அழைத்தார் என்பதற்காக எம்மால் பேச்சுக்கு செல்ல முடியாது.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதனை முதலில் அரசு ஏற்கவேண்டும், அவர்கள் எங்கு உள்ளனர் என குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் படங்கள் வெளியாகியிருந்தன. அவர்கள் எங்கே என்ற வினாவுக்கும் விடை வேண்டும். இவற்றுக்கு சாதகமான சமிக்ஞை வெளியிடப்படால் மாத்திரமே சந்திப்புக்கு செல்வது பயனுடையதாக இருக்கும்.” – என்றார்.

Print Friendly, PDF & Email