SHARE

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார்

இனப்படுகொலை இலங்கை அரசிற்கு மேலும் இம்முறை கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுக்கும் உண்ணாவிரத போராட்டம் நிச்சயம் உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டிக்கேட்கும். அவரது போராட்டம் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஷ்வநாதன் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழினத்திற்கு எதிராக மாபெரும் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட 4 அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து திருமதி அம்பிகை செல்வகுமாரினால் லண்டனில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 6 (3.2.2021)) ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மெய்நிகர் செயலியினூடான (ணுழழஅ) நிகழ்வில் கலந்து கொண்டு அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்துக்களை தெரிவித்த போதே உருத்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பிகை செல்வகுமாரின் இந்த தார்மீகப்போராட்டம் நிச்சயமாக தமிழீழ விடுதலைக்கு பெரும் வலுவாக அமையும். இவரது போராட்டத்தை;, தியாக தீபம் திலீபனின் போராட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். திலீபன் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. ஆனாலும் திலீபனின் போராட்டம் தோல்வியடையவில்லை. அவரது போராட்டம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது. அவ்வாறே அம்பிகை செல்வகுமாரின் இந்த போராட்டம் எங்களின் தற்போதைய போராட்டத்தை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

தமிழர்களின் நீதிக்கான இந்த போராட்டங்கள் எதிர்வரும் ஐ.நா. சபை அமர்வுடன் முடிந்துவிடப்போவதில்லை. எமக்கான நீதிகிடைக்கும் வரை எமது போராட்டங்களை ஒவ்வொரு தளங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலும் அம்பிகையின் இந்த போராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதுடன் இந்த போராட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்றும் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email