SHARE

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் மோதுவதற்கு முனையக்கூடாது. மாறாக  இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு அரசு முன்வரவேண்டும். இலங்கைக்குள் ஜெனிவா கலாசாரத்தை மஹிந்த ராஜபக்சவே கட்டியெழுப்பினார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் -கீ -மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.  இதன்பிரகாரம் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாகவே இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிட்டது. மஹிந்த அன்று வழங்கிய இணக்கப்பாடுதான் இன்றளவிலும் இலங்கையின் கழுத்தை இறுக்கியுள்ளது.

அதுமட்டுமல்ல 1989 இல் மஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜெனிவா சென்றார். இலங்கையில் ஜெனிவாக் கலாச்சாரத்தை அவரே உருவாக்கினார். அவ்வாறு செய்துவிட்டு அழுது புலம்புவதில் பயன் இல்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் மோதக்கூடாது. இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். செய்யக்கூடியவை எவை, செய்யமுடியாதவை எவை என்பதனை இராஜதந்திர ரீதியில் எடுத்துரைக்க வேண்டும். அதனைவிடுத்து மோதல் போக்கை கடைபிடிப்பது நெருக்கடியையே ஏற்படுத்தும்.

2015 இல் இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், எமது அரசுதான் நாட்டை நெருக்கடியில் இருந்து பாதுகாத்தது. சர்வதேச விசாரணையில் இருந்து விடுதலை பெற்றோம். எமக்கும் நாடுமீது பற்று உள்ளது.” -என்றார்.

Print Friendly, PDF & Email