SHARE

இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தமிழர்களுக்கான நீதியை  பெற்றுத்தரும்படி ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து  நீரை மட்டும் அருந்தி நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் இன்று 9 ஆவது நாளை எட்டியுள்ளது.

அனைத்து சுயாதீன விசாரணைப்பொறிமுறையை உருவாக்குதல், அனைத்து குற்றவியல் நீதிமன்றில் விசாரித்தல், மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு  கிழக்கு  தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையிலும் அவர்களின் அபிலாசைகளை தீர்மானிக்க வாக்கெடுப்பை பரிந்துரைத்தல் ஆகிய 4 அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசை நோக்கி முன்வைத்து அவர் உண்ண மறுத்து வரும் நிலையில்,  பிரித்தானியா அரசு அம்பிகையின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது.

ஒருவாரங்கள் கழிந்துள்ள அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய 9 ஆவது நாளினை தொடர்ந்துள்ளார்.

தனது கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன், உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இந்நிலையில், வழமை போன்று இன்று பிரித்தானிய நேரம் பி.ப.3 மணிக்கு ஆரம்பமாகும் அம்பிகைக்கு ஆதரவு குரல் கொடுக்கும் மெய்நிகர் நிகழ்வில்  பல்வேறு நாட்டு அரசியல் பிரமுகர்கள் சட்டவாளர்கள் என பலர் உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை சிவராஜா குருக்கள், வணபிதா றெக்சன், மற்றும் மௌலவி ரியாஸ் ஆகியோரின் மும்மத ஆசிச்செய்திகளுடன் ஆரம்பமான நேற்றைய 8 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், தமிழகத்திலிருந்து தோழர் தியாகு, டெல்லி வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் ராம் சங்கர், இயக்குனர் புகழேந்தி, மாவீரரின் தாயார் திருமதி சபரியம்மா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றியதுடன் இளம் இசையமைப்பாளர் தனபாரதி நேமனின் இசையில் அம்பிகையின் போராட்டத்திற்காக குறுகிய நேரத்தில் உருவாக்கப்பட்ட பாடல் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. பாடலுக்கான வரிகளை மது நேமன் எழுத ராகுல் கண்ணன் பாடியிருந்தார்.

9 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

தொகுப்பு- காண்டீபன் கிறிஸ்ரி நிலானி

உணவுதவிர்ப்பு போராட்டகுழு

Print Friendly, PDF & Email