SHARE

புலனாய்வுத் துறையினரால் தாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 11ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தாங்கள் சாறி அணிந்து வெளியில் செல்லமுடியாத நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது வீட்டில் இருந்து வெளியில் செல்லவேண்டுமானால் புலனாய்வுத் துறையினரிடம் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்றும் விண்ணப்பம் ஒன்று பூர்த்திசெய்து தரவேண்டும் எனவும் அழுத்தங்கள் செய்யப்படுவதாகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email