SHARE

“இலங்கையின் அண்டை நாடாகவும் அதிக நட்புள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் இறுக்கமானது. எனவே, ஐ.நா.வில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களித்து எமது நாட்டை ஆதரித்தே தீர வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தக் கடமையிலிருந்து இந்தியா விலகாது எனத் தாம் நம்புகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருக்கம் என்றும், இந்தியாவைப் பகைக்கின்றது என்றும் எதிரணியினர் பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர்.

இந்தியாவுடன் எமது அரசு மிகவும் நெருக்கமாகவே உள்ளது. அபிவிருத்தி விடயங்களில் இலங்கையும் இந்தியாவும் நேரில் பேசியே முடிவெடுக்கின்றது. தனிப்பட்ட முடிவு எதையும் எமது அரசு எடுப்பதில்லை.

இலங்கையின் அபிவிருத்தி விடயங்களில் இந்தியாவும் சீனாவும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளன. எனவே, இரு நாடுகளுக்கும் அபிவிருத்திகளை எமது அரசு பகிர்ந்தளிக்கின்றது. இதை அறியாமல் எதிரணியினர் அரசியல் இலாபங்களுக்காக உளறுகின்றனர்” – என்றார்.

Print Friendly, PDF & Email