SHARE

நீண்ட காலமாக ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னேற்பாடாக காவல்துறையால் பலர் கைது செய்யப்பட்டு பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜெர்மன் மனித உரிமைகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் கைதுகளில் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்கிற தகவலை உறவினர்கள் பெற முடியாத நிலை உள்ளது என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

எந்த காரணங்களின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர், எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்கிற விவரங்கள் எல்லாமே இரகசியாமாக வைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் டூசல்டோர்ஃபிலும், 50 பேர் ஃபிராங்கஃபர்ட்டிலும் 11 பேர் ஸ்டுட்கார்ட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அந்த மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியாத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அந்த அமைப்பு அஞ்சுகிறது. அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை மேற்குலக நாடுகள் தீவிரமாக ஆதரித்தன. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள். போர்க்காலத்தில் இடம்பெற்றவைகளுக்குப் பொறுப்பு கூறுதல். நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவை குறித்து அந்தத் தீர்மானம் பேசியது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஜெர்மனி இப்படியான சுற்றி வளைப்பு. கைதுகள். நாடு கடத்தும் எண்ணங்கள் ஆகியவை அதன் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றன என்று விமர்சகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மனித உரிமைகள் விடயத்தில் மேற்குலக நாடுகளின் ‘இரட்டை முகம்’ இதன் மூலம் வெளியாகியுள்ளது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு புறம் இலங்கையில் மனித நிலைமைகள் மோசமாகவுள்ளன, பன்னாட்டு விசாரணை தேவை, மத மற்றும் கலாச்சார உரிமைகள் நசுக்கப்படுகின்றன, நில அபகரிப்புகள் தொடருகின்றன என்றெல்லாம் சர்வதேச மட்டத்தில் மேற்குலக நாடுகள் ராஜபக்சக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. ஆனால் நாட்டிலிருந்து பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக உயிருக்கு அஞ்சி பல நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது எனும் செயல்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று புலம்பெயர் அமைப்புகள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மிகவும் சர்ச்சைக்குரிய குடியேற்றம் தொடர்பான சட்டம் ஒன்றை ஜெர்மனிய அரசு கொண்டுவந்தது. அந்தச் சட்டம் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த வழி செய்கிறது. அதுமட்டுமின்றி அந்தச் சட்டம் காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. கடந்த ஜனவரி 29ஆம் திகதி ஜெர்மன் அரசின் மனித உரிமைகள் கொள்கை மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணையர் பாபேல் காஃப்லர் அரசை தனது டிவிட்டரில் பாராட்டியிருந்தார். “ ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் -இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் குறித்து பாரதூரமான கவலைகளை அளிக்கிறது -என்று கூறியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனி தொடர்ந்தும் இணக்கப்பாடு பொறுப்பு கூறுதல் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும். மேலும் ஐ நா மனித உரிமைகள் குழுவுக்கும் இது தொடர்பில் ஜெர்மனி ஆதரவளிக்கிறது என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” இப்படியான பின்புலத்தில் ஈழத் தமிழர்கள் சிலரை ஜெர்மனியிலிருந்து வெளியேற்றும் முடிவு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்ச்சி மற்றும் மேற்குலக நாடுகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிக்க பன்னாட்டு விசாரணையாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிய ஜெர்மனி, அதேவேளை நூற்றுக்கும் அதிகமானவர்களை இலங்கைக்கு நாடுகடத்துகிறது. இது தான் ஜெர்மனியில் மனித உரிமைகள் தொடர்பிலான நிலைப்பாடா ? என்று அந்த அமைப்பு கேள்வி ஒன்றையும் முன்வைத்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் அல்லது பன்னாட்டு அமைப்புகள் இது தொடர்ப்கா ஒரு கானொளியையோ அல்லது எழுத்து மூலமான ஒரு அறிக்கையையோ தமது விரைவாக அனுப்புமாறு ஜெர்மன் மனித உரிமைகள் அமைப்பான ஐ எச் ஆர் ஏ கோரியுள்ளது.

ஜெர்மனியில் வாழும் ஈழத் தமிழர்கள் யாராவது காணாமல் போயிருந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டிருந்தாலோ உடனடியாக கீழ்க்கண்ட விலாசம், தொலைபேசி, தொலை நகல், மின்னஞ்சல் மூலம் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு The International Human Rights Association Bremen (IMRV)  கேட்டுள்ளது.

IMRV Bremen, Kornstr. 31 28201 Bremen, Germany. Fax: 0049 421 68 437 884, email: imrvbremen@gmail.com

Print Friendly, PDF & Email