SHARE

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று, பின்பு அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டுச் சந்தியூடாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொட்டகையை வந்தடைந்தனர்.

இதன்போது, ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின் கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email