SHARE

பேராயர் மல்க்கம் ரஞ்சித் சந்தேகம்

பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்களிப்பின் போது எதிரணியில் இருந்த முஸ்லிம் எம்.பிக்கள் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன், அது தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஆதரவாக வாக்களிக்காத நிலையில், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இந்த விடயத்திற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நடவடிக்கைகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த விடயத்தில் ஏதேனும் டீல் இருந்துள்ளதா? என்று சந்தேகிக்கின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email