SHARE

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துனைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நினைவு தூபியை மீளவும் புதுப்பொலிவுடன் கட்டிமுடிப்பதற்கு பொதுமக்களிடமிருந்து மாணவர்கள் நிதி உதவி கோரியிருந்தனர். அந்தவகையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள புதுப்பொலிவுடனான நினைவு தூபிக்கு பலர் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

அதனடிப்படையில் நமது ஈழநாடு அறக்கட்டளையும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தது. இதற்கான நிதியினை லண்டனிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் மற்றும் தாயகத்திற்கான செயற்பாட்டாளர் சதீஸ் குலசேகரம் ஆகியோர் முன்வந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email