SHARE

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறும் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை Lewisham East பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஜெனெட் டாபி (Hon. Janet Daby) அவர்களுடனான இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை செயற்பாட்டாளரான விஜய் விவேகானந்தன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சந்திப்பு கோவிட் காரணமாக மெய்நிகர் வழி ஊடாக (Zoom) வழியாக இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், விடுதலைப்புலிகள் மீதான தடையால் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் இன அழிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துச்சொல்லப்பட்டது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.

இக்காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மூலம் நீதிமன்றில் பெறப்பட்ட வெற்றியை நடைமுறைப்படுத்தி, அரசியல் வெற்றியாக மாற்றும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனெட் டாபி அவர்கள் கருத்துக்களை உள்வாங்கியதுடன்இ தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாலரான பிரீதி பட்டேல் (Rt. Hon. Priti Patel)ற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

அத்தோடு, பிரித்தானியா வாழ் தமிழர் சார்பாக பிரித்தானிய பாராளமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ள All-Party Parliamentary Groups (APPG) ல் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் Tamils APPG ல் தன்னை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்துள்ளார். இது இந்த இளைஞர்களின் முயற்ச்சிக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும்.

இந்த கலந்துரையாடலில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரான திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நிமலன் சீவரத்தினம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களான அனோஜன் சிவபாலன், பிரவிந்தன் ஜோர்ஜ் ஹமில்டன், அரவிந்தராஜ் நல்லதம்பி, ரஜீவன் பவளகாந்தன், விதுரா விவேகானந்தன், கிறிஸ்டியன் நவீந்திரராசா அன்டன் மயூரன் மற்றும் சிதம்பரசுப்ரமணியன் திருச்செந்திநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email