SHARE

” நாங்கள் டொருக்கு அடிபணிபவர்கள் அல்லர். டொலர்களுக்காக அலைபவர்களே ஜெனிவா சென்று, விருந்துபச்சாரங்களில் பங்கேற்று, இங்கு வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவுக்கு பதிலடி கொடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் சரத்வீரசேகர, பொன்சேகாமீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்ததுடன், டொலருக்காக இராணுவத்தைக்காட்டிக்கொடுக்கின்றார் எனவும் விமர்சித்தார்.
இதற்கு பதிலடிகொடுக்கும் வகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் செய்கின்றோம் என்பதற்காக படுகொலைக்கு அனுமதி வழங்கமுடியாது என்ற கருத்தையே நான் முன்வைக்கின்றேன். அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க முற்படுவதும் தவறாக செயலாகும். நாம் ஒன்றாக போர்களத்தில் இருந்தவர்கள். அதற்காக கொலை புரிந்தவருக்கு கருணை காட்டமுடியாது.

சரத் வீரசேகர என்பவர் கடற்படையில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் என்னிடம் வந்து அழுது புலம்பினார். தொழில் பெற்றுதருமாறும் கேட்டார். அதன்பின்னர் நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவிடம் பேசி, தொழில் பெற்று கொடுத்தேன். இராணுவத்தில் இருந்துதான் சாரதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கினேன். அவற்றை மறந்துவிட்டு இன்று எனக்கு சேறுபூசுகின்றார்.

நான் டொலர்களுக்காக வேலை செய்கின்றேனாம். எமது பைகளில் டொலர்கள் இல்லை. டொலர்கள் பின்னால் அழைபவர்களே, ஜெனிவா செல்வதுபோல் காட்டிக்கொண்டு, அங்கு சென்று டொலர்களை வாங்கிக்கொண்டு களியாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அப்படியான கீழ்த்தரமான செயலில் நாம் ஈடுபடமாட்டோம்.

போரின் நாம் தவறிழைக்கவில்லை. மனிதாபிமான சட்டங்களை பாதுகாத்தோம். அதனால்தான் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தனர். இதனையிட்டு நாம் பெருமையடையவேண்டும்.” – என்றார்.

Print Friendly, PDF & Email