SHARE

அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் ICPPG ஒன்றிணைந்து அழைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தலில் பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தினை வலிறுத்தவேண்டும் 

என இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் (ICPPG) கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் சவேந்திரசில்வா உள்ளிட்ட இலங்கைப் போர்க்குற்றவாளிகளை 06 யூலை 2020 அன்று நிறுவப்பட்ட பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான (GHR) தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 01 மே 2021 அன்று ICPPG இனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய அரசிற்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சவேந்திர சில்வாவிற்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் ஏனைய ஐரோப்பிய பங்காளிகளும்  தமது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையிலும் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது கரிசனையை வெளிப்படுத்தியது.

செல்வி சுபதர்ஷா

“இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் எந்தவொரு உண்மையான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை  என்றும் அது ஏமாற்றத்தினையும் கவலையினையும் ஏற்படுத்துகின்றதாகவும் ICPPG இன் இளையோர் அணியின் தலைவரான செல்வி சுபதர்ஷா வரதராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் செயற்படும் பாதுகாப்புப் படையினரால் இலங்கையிலுள்ள தமிழர்களிற்கு எதிராக சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தற்போதும் பரவலாக இடம்பெறுவதற்கான நம்பகமான 

ஆதாரங்களை ICPPG தொடர்ந்து பெற்றுவருவதாகவும் FCDO அல்லது உரிய நிறுவனங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் சம்மதத்துடன் மிக இரகசியமான முறையில் சாட்சியங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் “பிரித்தானியா அரசு இத்தடையினை மேற்கொண்டால் அது ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடுத்த கட்டமாகவும் அதன் பொறுப்புக்கூறலின் அடிப்படையில் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகவும் அமையும்” என ITJP யின் தலைவர் ஜஸ்மின் சூக்கா அவர்கள் தெரிவித்த கூற்றிற்கு முழுமையான ஆதரவினை  ICPPG தெரிவித்துள்ளது.

காண்டீபன் கிறிஸ்ரி நிலானி

மேலும் ICPPG யின் இளையோர் அணியினரால், இந்த முயற்சி தொடர்பில் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கீழுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் இந்த மனுவில் கையெழுத்திட்டு தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ICPPG இன் ஊடகப் இணைப்பாளர் காண்டீபன் கிறிஸ்ரி நிலானி கேட்டுக்கொண்டுள்ளார். 

https://www.change.org/p/time-for-the-uk-to-sanction-sri-lanka-s-army-commander-war-criminal-shavendra-silva

PRESS-RELEASE-7-may-English

Print Friendly, PDF & Email