SHARE

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க தவறிவிட்டது. அதாவது அரசாங்கத்தின் முறையான திட்டமின்மை காரணமாகவே நாடு மோசமான நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.

மேலும்  ஏனைய நாடுகள் இலங்கைக்கு  இலவசமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. அதனைத்தான் வாங்கப்போகின்றோம் என்றும் கூறுகிறது.

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு, நாட்டு மக்களை பாதுக்காக்குமா என்பது கேள்விக்குறியே ஆகும். அத்துடன் இதுவரையும் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை.

இதேவேளை  யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.

மேலும் வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள்  ஆனாலும் அவை போதுமானதாக இருக்காது. இந்த அரசாங்கத்துக்கு ஒட்டுமொத்த மக்களின் மீது அக்கறை கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email