SHARE

இந்து ஆலயங்களில் பிரார்த்தனைகள், நித்திய பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களை மட்டுப்படுத்தப்பட் பக்தர்களுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் திடீரென அதிகரித்தமையினால், இந்து ஆலயங்களில் நிகழ்த்தப்படும் வழமையான பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் திருவிழாக்களுக்கு சுகாதார அமைச்சு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொவிட் நிலையினை கருத்திற்கொண்டு இந்து ஆலயங்களில் வழமையாக இடம்பெறும் நித்திய பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை அதிகபட்சமாக ஐந்து பேருடன் நடத்தலாமென்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வருடாந்த திருவிழாக்களை பொது மக்களின் பங்குபற்றுதலுடன் நடத்த முடியாது. ஆனாலும் அதிகபட்சமாக 15 ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன்  சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email