SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு வரும் செப்ரெம்பர் மாதம், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சின் விருந்துபசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டு முறை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் பேச்சுகளுக்கு சாத்தியமான வாய்ப்புகள் குறித்தும் அதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் சமூகங்களின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும், இந்தியாவுக்கு தகவல்களை தெரியப்படுத்தும் நோக்கிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவை புதுடெல்லிக்கு அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறித்தும், செப்ரெம்பர் மாதம் இந்த பயணம் இடம்பெறும் வாய்ப்புள்ளதாகவும், இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை விவகாரத்தில் வரலாற்று ரீதியாக இந்தியா வகித்து வந்த தலைமைத்துவ பாத்திரத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் புதுடெல்லி கவனம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ஆகியோரைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு இலங்கையை விட்டு வெளியேறவுள்ள நிலையில், தமது கண்காணிப்பில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடருவதை உறுதி செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில வார இதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email