SHARE

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவு கோரி இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

அக்காணொளியில் தமிழ் இளையோர் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றைத் தாங்கள் ஆரம்பித்தமையையும் மற்றும் இறுதி யுத்தத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினமான 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களால் முன்மொழியப்பட்டு முன்பிரேரணை (EDM 64) கொண்டுவரப்பட்டமையையும் அதே நேரம் அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை இதுவரை இப்பிரேரணைக்கு 29 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளமையையும் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு யூலை 23 ஆம் திகதி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG இன் ஆதரவுடன் தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக இல்லாமையினால் மேற்படி செயற்பாட்டிற்கு அனைவரின் ஆதரவினையும் கோரி நிற்பதாக மேலும் தெரிவித்துள்ளனர். அதற்கு ஒவ்வொருவரும் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு மின்னஞ்சல் அனுப்பி (EDM 64) இற்கு ஆதரவாக கையெழுத்திடும் படியும் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கீழேயுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் இளையோராகிய தங்களால் ஆரம்பிக்கப்பட்ட இணைய வழி கையெழுத்துப்போராட்டத்திற்கு தங்களின் ஆதரவினை வழங்குமாறும் கோரியுள்ளனர்.

https://www.change.org/p/time-for-the-uk-to-sanction-sri-lanka-s-army-commander-war-criminal-shavendra-silva

Print Friendly, PDF & Email