SHARE

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களினால் (Tamils for Labour) நடாத்தப்படும் வருடாந்த மாநாடு தவிசாளர் திரு சென் கந்தையா அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (26.09.2021) பிற்பகல் பிறைற்ரனில் உள்ள கில்ரன் ஹோட்டலில் இடம்பெற்றது. தவிசாளர் சென் கந்தையா அவர்கள் தனது வரவேற்புரையில் இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை கற்பழிப்பு, சித்திரவதை, வலிந்து காணாமல் போதல், கடத்தல், சட்டவிரோத கொலைகள் மற்றும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் ஆகிய வடிவங்களில் இலங்கை இராணுவம் மற்றும் சில அரசியல்வாதிகளினாலும் தொடரப்பட்டு வருவதாகவும் இவ்வாறாக இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்படும் இனப்படுகொலைக்கு தமிழ் மக்களுக்கு நீதி வழங்க தற்போதைய பிரித்தானிய அரசாங்கத்தை ஏனைய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற தொழிற்கட்சி வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.

வெளியுறவுத்துறையின் நிழல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கொளரவ லிசா நன்டி (Rt Hon Lisa Nandy MP) அவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது, இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட/ இழைக்கப்பட்டு வருகின்ற இனப்படுகொலை மற்றும் சர்வதேச குற்றங்களிற்கான பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பரிந்துரைப்பது போன்ற செயற்பாடுகளை தொழிற்கட்சி முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

“மனித உரிமைகள், சட்டத்திற்குட்பட்ட ஆட்சி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை எப்போதும் தொழிற்கட்சியின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார். இம்மாநாட்டில் தொழிற்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களிற்கான நிழல் அமைச்சருமாகிய கொளரவ ஸ்ரிபன் கினோக் அவர்கள் (Stephen Kinnock MP), கொளரவ சிவோன் மெக்டோனா அவர்கள் (Siobhain McDonagh MP), கொளரவ பரிகாடினர் (Barry Gardiner MP), கொளரவ டோன் டோன் (Dawn Butler MP) கொளரவ ஸரீபன் ரிம்ஸ் (Stephen Timms MP) எனப் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் பிரதான பேச்சாளர்களாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான (ITJP) திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ஹரிசன் (Frances Harrison), சித்திவதையில் இருந்து விடுதலை அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சோனியா ஸ்கேற்ஸ் (Sonya Sceats, Chief executive of freedom from Torture), சுபாசினி நாதன் (வழக்கறிஞர், மனித உரிமை செயற்பாட்டாளர்), ஆரபி ராஜ்குமார் (Advocacy member, PEARL) ஆகியோர் கலந்து கொண்டனர். Rt Hon Stephen Kinnock MP தனது உரையில் அண்மையில் நடைபெற்ற UNHRC தீர்மானம் வரவேற்க்கத்தக்கதாக இருப்பதாகவும் மேலும் அதில் பல குறைபாடுகள் இருப்பதனையும் சுட்டிக்காட்டியதோடு பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை ஐசிசிக்கு பரிந்துரைக்க மறுப்பது ஏன் என்பது தங்களுக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பிரித்தானிய அரசிற்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளும் இலங்கையுடன் GSP வரிச்சலுகைக்கு உடன்படக்கூடாது எனவும் தெளிவான நெறிமுறைகளைக் கொண்ட வர்த்தகக் கொள்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமது கட்சி தொடர்நது அழுத்தம் கொடுக்கும் என மேலும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய Siobhain McDonagh MP, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை எதிர்த்து 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற சதுக்கத்தில் கூடியிருந்த தமிழ் சமூகத்தின் தனது நீடித்த நினைவுகளை எடுத்துரைத்ததுடன், “தமிழ் சமூகத்திற்கு என்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வேன்” எனக்கூறினார்.

பிரான்சிஸ் ஹரிசன் (ITJP) கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை எடுத்துரைத்தார். அத்துடன் போர்குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் ஐநாவால் உருவாக்கப்படவுள்ள சுயாதீன பொறிமுறைக்கு ஒரு வருடம் மட்டுமே உள்ளதாகவும், தரவு சேகரிக்க நிறுவப்பட்ட பொறிமுறையின் நிதி 50% குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தீர்மானம் செயற்பாடற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய ஹரிசன், பொலிஸ் பயிற்சி தொடர்பான பிரச்சனைகளை பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மீது மட்டுமல்ல, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உள்ளிட்ட பட பல அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க அரசினை கோருமாறும் அம்மாநாட்டில் அவர் கேட்டுக்கொண்டார். மாநாட்டில் தொடர்ந்து ஏனையவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

Print Friendly, PDF & Email