SHARE

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones உடன் இன்று (1) இராஜதந்திர சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

செயற்பாட்டாளரான விஜய் விவேகானந்தனால் ஒருங்கமைக்கபட்டிருந்த மேற்படி Croydon மத்திய பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான Sarah Jones உடனான மெய்நிகர்வழி (Zoom) சந்திப்பில் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் (ITJP) இயக்குனரான Francis Harrison, இனப்படுகொலையை சர்வதேச நீதிமன்றிற்கு எடுத்துச்செல்லும் வழக்குகளை முன்னெடுத்துவரும் மூத்த வழக்கறிஞர் அருண் கணநாதன் மற்றும் சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர்.

இந்நிலையில், இந்நத சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 70000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென அனைவரும் முன்வைத்த கருத்துக்களை உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சியின் மற்றய இரு பாராளுமன்ற உறுப்பினர்களான Fleur Anderson MP மற்றும் Stephen Timms MP க்களுடன் மேலும் இது தொடர்பில் கலந்துரையாடி குறித்த விடயத்தினை பாராளுமன்ற விவாதத்திற்கு அனுமதி பெற முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் வெளியுறவு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்பதாகவும்இ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள்இ கடத்தல்கள் மற்றும் துன்பங்களைப் பற்றி வெளியுறவு அலுவலகம் நேரடியாக கேட்டு அறியக்கூடிதாக இருக்கும் என்றும் கூறினார்.

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன் அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றைய மேற்படி சந்திப்பில் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களான விதுரா விவேகானந்தன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜனகன் கணேஷ், ஜனுஸ்டன் நவரட்ணம், சுஜிவன் ஆனந்தராசா மற்றும் சிதம்பரசுப்ரமணியன் திருச்செந்திநாதன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email