SHARE

கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிர் டேவிட் மெக்கினன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(14) அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கனேடிய உயர்ஸ்தானிகருடனான இந்த கலந்துரையாடல் ஆரோக்கியமாக இருந்தது. இதன்போது தற்போது இருக்கும் அரசாங்கம் தமிழர்களை அரச இயந்திரத்தால் நசுக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்றும்,

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை சாட்டு வைத்து தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

Print Friendly, PDF & Email