SHARE

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷ மற்றும் இராணுவ அதிகாரிகளான கமால் குணரட்ன ஜகத் ஜெயசூரியா சிசிர மெண்டிஸ் உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தலைவர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உட்பட அந்நாட்டு இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிக்ளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் 200 தமிழர்கள் சார்பாக நேற்றை தினம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன்; இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டு, இறுதிக்கட்டப் போரில் மட்டும், 1 இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டதாக, ஐ.நா. மன்றம் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அளித்த ஆய்வு அறிக்கை, ஆவணச் சான்றுகளுடன் குற்றம் சாட்டி இருக்கின்றது.

ஆனால், 12 ஆண்டுகள் கடந்தபின்னரும், இன்றுவரையிலும், இனப்படுகொலையாளர்கள் மீது எந்த நடவடிக்கையையும், உலக நாடுகள் மேற்கொள்ளவில்லை. இலங்கையிலும் அத்தகைய நீதி விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

இது தமிழ் இனத்திற்கு எதிரான அநீதி ஆகும்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் தவிர, பல்லாயிரக்கணக்கில் காணாமல் போன ஈழத்தமிழ் இளைஞர்களின் நிலை என்ன? அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

சுமார் 8 இலட்சம் தமிழர்கள், இலங்கையில் இருந்து வெளியேறி, உலகின் பல நாடுகளில் அடைக்கலம் பெற்று இருக்கின்றார்கள். அவர்களுள் பல்லாயிரக்கணக்கானவர்கள், இலங்கைக்கு வந்து போவதற்கும் இலங்கை அரசு தடை விதித்து இருக்கின்றது. தவிர, ஆட் கடத்தல், சட்டத்திற்கு எதிராக தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக நாடு கடத்தல் போன்ற குற்றங்களையும், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, தொடர்ந்து செய்து வருகின்றது. இவை எல்லாம், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றம்.

மியான்மர் நாட்டில், ரொகிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த வழக்கை, உலக நீதிமன்றம் (International Court of Criminal Justice) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது.

அதுபோல, இலங்கையில் பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பாக, Global Rights Compliance LLP (GRC) என்ற சட்ட அமைப்பு, ரோமச் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் (Article 7 of the Ro Roman Statute) பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவரின் (ஞசடிளநஉரவடிச) கவனத்திற்கு, பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு (COP26) நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டில், கோத்தபாய இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகின்றது.

அக்கொடியவனின் வருகையை எதிர்த்துக் களம் காண, புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.

இனக்கொலை செய்த பல நாடுகளின் ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் தண்டனை பெற்று இருக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, 3500 யூதர்கள் படுகொலையில் தொடர்பு உடைய, 100 வயதான நாஜி அதிகாரி மீது, ஜெர்மனி நாட்டின் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணை தொடங்கி இருக்கின்றது.

அதுபோல, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்த கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என, ஈழத்தமிழ் அமைப்புகள் கோரிக்கை பிரித்தானிய அரசின் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது. இந்தத் கருத்தை வலியுறுத்தி, ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளித்துள்ளேன்.

ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபாயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
28.10.2021

Print Friendly, PDF & Email