SHARE

மட்டக்களப்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விதுசன் என்ற இளைஞரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.இதன் போது தோண்டி எடுக்கப்பட்ட விதுசனின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி விதுசனின் உடலில் அடிகாயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், விதுசனை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி மற்றில் அறிவித்தார்.மட்டக்களப்பு ஜெந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனை கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக கூறி இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருக்கும் போதே மரணமடைந்தார். குறித்த மரணம் ஐஸ் போதை பொருள் உட்கொண்டதாலேயே ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு கூறியது.

அதே போல் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையிலும் குறித்த இளைஞனின் மரணம் ஐஸ் போதை பொருள் உட்கொண்டமையாலே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதேவேளை தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் அடித்ததாலேயே தனது மகன் மரணம் அடைந்திருக்கலாம் என நீதிமன்றத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டதால் புதைக்கப்பட்ட விதுசனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து இலங்கையிலேயே பிரேதப் பரிசோதனையில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின்னுடைய பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தற்போது குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நிலையில் அதில் ஏற்கனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு முற்றிலும் மாறுபட்ட அறிக்கையே வெளியாகியுள்ளது.அதாவது மரணமடைந்த விதுசன் உடலில் அடித்து துன்புறுத்தப்பட்டதற்கான பல அடையாளங்கள் காணப்படுவதுடன் குறித்த இளைஞனின் மரணம் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாலேயே நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மரணமடைந்த இளைஞர் தொடர்பாக உடல் கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் படி குறித்த இளைஞனை பொலிஸார் இரவு முழுவதும் அடித்து சித்திரவதை செய்தே கொலை செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதனால் குறித்த இளைஞனின் கைதுடன் சம்மந்தபட்ட பொலிஸாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email