SHARE

இன்றைய ஸ்கொட்லாந்து பொலிஸாரின் உயர்மட்ட கலந்துரையாடலில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

சிறீலங்கா காவல்துறையினரின் விசேடபடையணிக்கு (Special Task Force (STF)), ஸ்கொட்லாந்து காவல்துறை, 2007 முதல் பயிற்சியளித்து வருகின்றார்கள். அவர்களால் பயிற்றப்பட்ட படையணியே இறுதிப்போரின் போது, பிரித்தானிய தனியார் இராணுவமான கீனி மீனியின் ஒத்துழைப்புடன் மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்திருந்தார்கள் எனப் பிரித்தானிய ஊடகவியலாளர் ஃபில் மில்லர் Keenie Meenie: Britain’s Private Army என்ற விவரணப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

சித்திரவதையில் இருந்து விடுதலை (Freedom From Torture) மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) போன்ற மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து ஸ்கொட்லாந்து அரசுக்கு அழுந்தம் வழங்கி வந்தன.

இதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து காவல்துறை பயிற்சியளிப்பதை மீளாய்வு செய்ய வேண்டுமெனப் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன. இதன் விளைவாகவே இன்றைய ஸ்கொட்லாந்து காவல்துறையினரின் உயர்மட்ட கலந்துரையாடலில் 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை மேற்கோள் காட்டி சிறீலங்கா காவல்துறைக்கான பயிற்சியை நிறுத்துவது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தியோக பூர்வ அறிவிப்பு தொழில் கட்சிக்கு ஆதரவான தமிழர் அமைப்பின் (Tamils For Labour) தலைவரான திரு சென் கந்தையா அவர்களுக்கு ஸ்கொட்லாந்து பொலிஸாரின் உயர் மட்ட அதிகாரியால் மின்னஞ்சல் மூலம் உத்தியோ பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான இந்த அறிவிப்பு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களாலும் (Tamils For Labour), பழமைவாத கட்சிக்கான பிரித்தானிய தமிழர்களாலும் (British Tamil Conservative) மற்றும் பிரித்தானிய வாழ் தமிழ் இளையோராலும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிக்கான வெற்றியாகவே இவ் அறிவிப்பு அமைந்துள்ளது.

இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தால் சித்திரவதைப்பட்ட தமிழர்கள் துணிந்து முன்வந்து ஸ்கொட்லண்ட் ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளுக்கு நேர்காணல்களை வழங்கியிருந்தமையும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலதிக தகவல்களுக்கு:
https://www.spa.police.uk/meetings/authority-meetings/24-november-2021/

Print Friendly, PDF & Email