SHARE

– மாவை பகிரங்க அழைப்பு

“தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்”, என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.

ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயக கட்சி செயலாளர் ஸ்ரீதரன் (சுகு), இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் எனப் பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய கூட்டத்திலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) பொது செயலாளர் சு. சதானந்தன் (ஆனந்தி அண்ணர்) நினைவேந்தல் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தவை வருமாறு,

“தமிழ் மக்கள் இன்று மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெருக்கடிமிக்க காலமாக இன்றைய நிலைமை இருக்கின்றது. இங்கு பேசிய எல்லோருடைய பேச்சுக்களும் நாங்கள் இன்னும் சரியான இடத்திற்கு வந்திருக்கவில்லை என்பதையும், தமிழ் மக்களின் பிரச்னை தொடர்பாக சரியான கோட்டில் பயணிக்கவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டின.

இதற்கு நானும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்த இனத்துக்காக மிக நீண்டகாலமாக உழைத்தவன் என்ற ரீதியிலும் மிகப்பெரிய பாரம்பரியமுடைய கட்சி ஒன்றின் தலைவர் என்ற ரீதியிலும் நானும் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறேன். இந்த அடிப்படையில்தான் இன்றைக்கு எந்த பக்கம் திரும்பினாலும் ஒன்றுபட்ட தரப்பாக ஒற்றுமைப்பட்ட தரப்பாக நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்ற விடயம் இன்று நேற்றல்ல மிக நீண்ட காலமாகவே பேசப்படுகின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லை.

ஆனால், இதற்காக நாங்கள் அதை கைவிட்டுவிட முடியாது. இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டேயாக வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே கருதுகிறோம். அன்றைய நாட்களில், அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் – தமிழினத்தின் தந்தை செல்வாவின் தளபதியாக, தலைவர் அமிர்தலிங்கத்தின் தளபதியாக இங்கே இருக்கின்ற சித்தார்த்தனின் தந்தையார் தருமலிங்கம் அந்த நாட்களில் செயல்பட்டதை எண்ணிப் பார்க்கின்றேன்.

கட்சியிலோ அல்லது கட்சிக்கு உள்ளேயோ ஒரு பிரச்னை வருகிறது என்றாலும் சரி, கட்சிக்கு வெளியிலே ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றாலும் சரி, முதலில் சமாதானம் பேசுகிற ஒரு தூதராக இருந்தவர் தருமலிங்கம்தான். அன்றைக்கு பெரிய தலைவர்களோடு விவாதிக்கும் விடயங்களை அவர்களோடு விவாதித்து விட்டு அதை இளைஞர்களான எங்களோடு அன்றைய நாட்களிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேள்விகளை எழுப்பும்போது மிகவும் கவனமாக – அதை உண்மையாக எங்களுக்கு அவர் விளக்கமளித்து இருப்பதை நான் இன்றைக்கும் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடியான காலசூழ்நிலையில் அவரின் வழித்தோன்றலான சித்தார்த்தன், தமிழ்த் தேசிய இனத்தின் நன்மை கருதி சிதறிப் போயிருக்கக்கூடிய தமிழர் தரப்புகளை ஒன்றிணைக்க தலைமை தாங்க வேண்டும். சகல தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஏனென்றால், எந்த ஒரு விடயத்தையும் நிதானமாகவும் பொறுப்பாகவும் செயல்படுத்தி எல்லோரோடும் நட்போடு பழகக்கூடிய தன்மையும் இருக்கக்கூடிய சித்தார்த்தன் ஒற்றுமை முயற்சியை தலைமை தாங்கி கொண்டுசெல்ல வேண்டும் என்று நான் அவரிடம் மிகவும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன். இதை அவர் நிறைவேற்ற வேண்டும். அதுதான், அவர் தமிழினத்திற்கு செய்யக்கூடிய ஒரு மாபெரும் கடமையாக இருக்கும்” என்றார்.

Print Friendly, PDF & Email