SHARE

நீதி விசாரணை கோரி மல்லாகம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினரும் அரசியல் துறையின் நிதிப்பிரிவு பொறுப்பாளருமான ஆதவன் அவர்களின் மரணம் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், அவர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் முறையான விசாரணை மேற்கொண்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என அவரின் குடும்பத்தினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த விண்ணப்பம் 4 ஐனவரி 2022 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51), யாழ் பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர், 1994 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2009 வரை உறுப்பினராக செயற்பட்டவர். நேர்மைக்காக பெயர்பெற்ற அவர், முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் கீழ் அரசியல்துறையின் நிதிப்பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டார்.

இறுதி யுத்தம் முடிவுற்ற பின்னர், புனர்வாழ்வு பெறாமல், வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்ற, இவர் நாட்டின் நிலைமை சற்று தணிந்ததை தொடர்ந்து நாடு திரும்பி கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 28 செப்டெம்பர் 2021 அன்று அதிகாலை 6 மணியளவில், வழமைபோல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளை பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்து, அன்றய தினமே அவர்களின் வீட்டுக்கு சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிவித்திருந்தார். ஆயினும் எந்த விசாரணையும் செய்யப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. எமது ‘நமது ஈழநாடு‘ உட்பட ஒருசில இணையத்தளங்களை தவிர, அனைத்து பிரதான ஊடகங்களும் பத்திரிகைகளும் இந்த செய்தியை பிரசுரிகாமல் இருட்டடிப்பு செய்திருந்தன.

பின்னர் 30 செப்டெம்பர் 2021 அன்று மாலை குறித்த நபர் நவாலி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து ஸ்தலத்துக்க உடன் விரைந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர் அவரின் உடலில் இரத்தக்கயங்கள் இருப்பதை நேரடியாக கண்டுள்ளார். பொலிசார் அவரை அண்மையில் செல்லவிடாமல் தடுத்த போதும் அவர் சில படங்களை எடுத்துள்ளார். இந்த படங்களே ஊடகங்களில் வெளியாகின. இந்த படங்களை உன்னிப்பாக கவனித்தால் உடலில் காயங்கள் இருப்பது தெளிவாக தெரிகின்ற போதிலும், அவரின் மரணத்தில் சந்தேகம் இல்லையென்றும் இது தற்கொலை என்றும் பொலிசார் மூடிமறைக்க ஆரம்பித்தனர். இதுவரை பொலிசாரால் எடுக்கபட்ட படங்கள் வெளியிடப்படாமல் இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில் சில தமிழ் அரசியல்வாதிகளும் இயங்கும் சில முன்னாள் விடுதலைப்புலி போராளிகளும் இலங்கை புலனாய்வுதுறையுடன் இணைந்து ஆதவனின் குடும்பத்தினருக்கு மறைமுக அழுத்தம் வழங்க ஆரம்பித்தனர். மரண விசாரணை கோரினால் பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் ஆதவன் முன்னாள் போராளி என்பதையும் அவர் புனர்வாழ்வு பெறவில்லை என்பதையும் மறைத்த காரணத்தால் மனைவிக்கும் பிரச்சனைகள் வரும் என்றும் மறைமுகமாக மிரட்டல்கள் விடுத்து, இந்த விடயத்தை விரைவில் மூடிவிடவேண்டும் என்றும் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று வாக்குமூலம் வழங்கும்படியும் மனைவிக்கு அழுத்தம் வழங்கியுள்ளனர்.

இந்த அழுத்தங்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய பயம் போன்ற காரணங்களால் ஆதவனின் மனைவி வேறு வழியின்றி தனக்கு மரணத்தில் சந்தேகம் இல்லை என்று திடீர் மரணவிசாரணை அதிகாரியான, திரு. சிதம்பரம் மோகன் மற்றும் பொலிசாரிடமும் வாக்குமூலம் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதேவேளை, விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில், ஆதவன் நிதி நெருக்கடி மற்றும் வேலை இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனாலேயே தற்கொலை செய்யும்முடிவுக்கு தள்ளப்பட்டார் என்றும் திட்டமிட்டு கதைகள் புனையப்பட்டு பரப்பப்பட்டன. இது தொடரபாக பிரபல சட்டத்தரணி ஒருவரை அணுகிய போது, அவர் இது தற்கொலை தான் என்று தானே முடிவுசெய்து, ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தை சொல்லி வழக்கு தாக்கல் செய்ய மறுத்தது மட்டுமன்றி, ஆதவனை தெல்லிப்பழை மனநல மருத்துவமனையில் சிகிச்சைபெறும் போது நேரில் கண்டதாகவும் அபாண்டமான பொய்யை பரப்பினார். அவரின் மனைவியின் சம்மதம் இல்லாமல் விசாரணை கோர முடியாது என்றும், மனைவியே மரணவிசாரணையை தடுக்கிறார் என்றும் திட்டமிட்டு கதைகள் பரப்பட்டன.
இருந்தும் ஆதவனின் சகோரதர்கள், மைத்துனர், நண்பர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் குறித்த மரணம் சந்தேகத்துக்கிடமானதாக உள்ள காரணத்தினால் முறையான விசாரணை செய்யப்பட வேண்டும் என பல வழிகளிலும் வலியுறுத்தியிருந்தனர். ஆரம்பத்தில் இது தற்கொலை என்று மூடமுற்பட்ட பொலிசார், பின்னர் பலரால் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக வேறுவழியின்றி கண்துடைப்பு விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.

இவருடைய வீட்டிற்கும் இவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நெடுந்தூரம் காணப்படுகிறது (அதாவது சண்டிலிப்பாயில் இருந்து நவாலி) ஆகவே குறித்த நபர் வீட்டில் இருந்து சென்ற நேரம், மற்றும் காரணம் என்பவற்றை கருத்தில் கொண்டும், அவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதியின் சூழலமைப்பு என்பவற்றை கருத்திற்கொண்டு பல சந்தேகங்கள் காணப்பட்டதால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரியான திரு சிதம்பரம் மோகன் பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

ஆனால் உடல் அழுகியிருந்த காரணத்தாலோ அல்லது வேறு அழுத்தங்கள் காரணமாவோ வைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை முறையாக செய்யப்பட்டதாக தெரியவில்லை. முழுமையான சோதனைகள் செய்யப்படாமலேயே இவர் நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் “No injuries suggestive of intentional violence on the body” (வேண்டுமென்றே ஏற்படுத்திய வன்முறை காயங்கள் என்று சந்தேகிக்க கூடிய காயங்கள் உடலில் காணப்படவில்லை) என்று ஒரு “குறிப்பு” (note) விசேடமாக இணைக்கப்பட்டுள்ளது. இது தவறான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது மட்டுமன்றி, இவ்வாறான விசேட “குறிப்பு” சாதாரண உடல்கூற்று அறிக்கைகளில் எழுதப்படுவதில்லை. ஏதோ இருக்கும் ஒன்றை மறைக்கவும் மேலதிக விசாரணைகளை தொடர விடாமல் தடுக்கும் நோக்கத்திலுமே இப்படி ஒரு விசேட குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

பலவிதமான அழுத்தங்கள் மற்றும் பயம் காரணமாக குடும்பத்தினரின் ஒத்துழைப்பின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு மத்தியிலும், நேர்மையுடன் செயற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியான திரு சிதம்பரம் மோகன், நியாயமான சந்தேகங்கள் உள்ளதை உறுதிசெய்து, உடலை எரிப்பதை தடை செய்து, மேலதிக உடற்கூற்று பரிசோதனையின் பின், சடலத்தை புதைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவு வழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் சடலம் புதைக்கப்பட்டது.

இவ்வளவு நடந்திருத்தும் இவை எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லை. ஊடகவிலாளர் சங்கங்களை அணுகி, இந்த உண்மைகளை வெளிப்படுத்தும்படி கேட்டுகொண்ட போதும் அவர்கள் பின்வாங்கினர். உதயன் பத்திரிகை ஊடகவியலாளரான சோபிகா சிமைலினி பொன்ராசா அவர்கள் துணிந்து புலன்விசாரணைகளில் ஈடுபட்டு, பல உண்மைகள் வெளிக்கொணர முற்பட்டபோது, அவர் மறைமுகமாக இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டார். இருந்தும் அவரின் விடாமுயற்சியால் பல உண்மைகள் வெளிச்சத்ததுக்கு கொண்டுவரப்பட்டன.

மிக முக்கியமாக, ஆதவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் நீதி விசாரணையை முடக்க முயற்சி செய்கிறர்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என்பதையும் வெளிக்கொணர்ந்தார். அத்துடன் மிக முக்கியமாக ஆதவன் காணாமல் போவதற்கு சில தினங்கள் முன்னர், அப்பகுதியில் உள்ள சமாதான நீதவான் ஒருவரை சந்தித்து, தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருக்கவில்லை என்றும் எந்த வித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தி கடிதம் தருமாறு கேட்டுக் கொண்ட தகவலை ஊடகவியலாளராக சோபிகா மேற்கொண்ட புலன்விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை பொலிஸ் விசாரணையும் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவலானது, காணாமல் போவதற்கு முன்னர் யாரோ ஒரு பகுதியினரால் விடுதலைப்புலிகளின் நிதி மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும், சண்டிலிப்பாயில் வசித்த ஆதவனுக்கு நவாலியில் பாழடைந்த கிணறு இருப்பது எப்படி தெரியும் என்பதும், நன்றாக நீச்சல் தெரிந்த அவர் எப்படி ஆழமற்ற கிணற்றில் முழ்கி இறக்க முடியும் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன. அவற்றைவிட அந்த கிணற்றுக்கு போகும் வழியில் உள்ள பாதுகாப்பு கமராவை (CCTV) பரிசீலனை செய்ததில் அந்த வழியால் ஆதவன் நடந்து போனதுக்கான தடயங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. அப்படியானால், அவர் கடத்தப்பட்டு, உயிருடன் கட்டப்பட்ட நிலையில் அல்லது கொல்லப்பட்ட பின் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்கவேண்டும் என்ற சந்தேகத்தை பலப்படுத்துகிறது.

பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான சில கருத்து முரண்பாடுகள் காரணமாக ஆதவனுக்கு அழுத்தங்களும் இருந்ததாகவும் அதனால் அவர் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ஒரு மனநோயாளி எனவும், மனநிலை மாறாட்டம் காரணமாகவே தற்கொலை செய்தார் என்றும் நேரில் பார்த்தது போல உறுதியாக சில தமிழ் தேசியம் பேசும் அரசியலவாதிகள் தொடர்ந்து அடித்து கூறிவருவது மேலும் சந்தேக்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால் அவர் சுகதேகியாக, மிகவும் தெளிவான மனநிலையுடன் காணாமல் போன தினம்வரை பணியாற்றி வந்ததாக அவரின் சக ஊழியர்கள் பலர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இதற்கு மேலாக ஆதவன் எந்த வைத்தியசாலையிலும் மனநோய்க்கு சிகிச்சை பெறவில்லை என மனைவி உறுதியாக தெரிவிக்கிறார். போலிசார் வைத்தியசாலைகளில் மேற்கொண்ட விசாரணையும் அதனை உறுதிசெய்துள்ளது. இத்தனை மாதங்கள் கடத்தும் முழுமையான மரணவிசாரணை அறிக்கை வெளியிடப்படாமல் வழமைக்கு மாறாக இழுத்தடிக்கப்பட்ட காரணத்தாலும், மேற்படி சந்தேகங்களின் அடிப்படையிலும்; ஆதவனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததன் பிரகாரம், ஊடகவியலாளராக சோபிகாவின் முயற்சியால், சட்டத்தரணி ம. திருக்குமரன் அவர்களால் கடந்த வாரம் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விளைவாக மிக முக்கிமான அதிரவைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக, நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முழுமையான உடற்பரிசோதனை அறிக்கை மற்றும் மரணவிசாரணை அறிக்கையில் ஆதவனின் உடலின் மேல்பாகத்தில் தாக்குதலுக்கான ஆதாரங்கள் (ஏதக்காயங்கள்) இருப்பதாகவும் (Evidence of Trauma on Body Surface) கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் (Injuries were noted on neck, chest and abdominal region) குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முகம் சேதமடைந்திருப்பதுடன் இரு கண்களும் தோண்டப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட, பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் ஆதவன் மூளை சுகம் இல்லாதவர் என்றும் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் உண்மைக்கு புறம்பான தகவல் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்ட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறான திடுக்கிடும் உண்மைகள் இதுவரை திட்டமிட்டு மறைக்கப்பட்டமையானது, ஆதவன் கடத்தப்பட்டு, கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு, கொடூரமாக கொல்லப்ட்ட பின்னரே பாழும் கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை மேலும் உறுதிசெய்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பம் கடந்த 4 ஐனவரி 2022 அன்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணி ம. திருக்குமரன் தலைமையில், சட்டத்தரணி எம். ரமணன் மற்றும் சட்டத்தரணி எஸ். றிசிகரன் உட்பட்ட சட்டத்தரணிகள் குழு ஆஐராகியிருந்தனர். அவர்களின் வாதத்தின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்வரும் 10 ஐனவறி 2022 அன்று மன்றில் மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த செய்தி நேற்றயதினம் பத்திரிகையில் வெளியானதை தொடர்ந்து, இன்று திரு. தெய்வேந்திரன் கோபன் உட்பட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவர் இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஆதாரங்கள் வெளியான பின்னராவது, தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளும், சட்டத்தரணிகளும், ஊடகவியலாளர்களும் உண்மையை உணர்ந்து, இது போன்ற சம்பவங்களை தற்கொலை என சிங்கள அரசு மூடிமறைப்பதற்கு உடந்தை போகாமல், நீதி விசாரணை முன்னெடுக்க குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email